மேற்குவங்க மாநிலத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக நடந்துவரும் போராட்டத்தில், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
மத்திய மின் தொகுப்பு நிறுவன மான பவர் கிரிட் கார்ப்பரேஷன் சார்பில் மேற்குவங்க மாநிலம், 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பன்கார் பகுதியில் 440/220 கிலோவாட் மின் பகிர்மான துணை நிலையம் அமைக்க 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது.
சந்தை மதிப்புக்கு ஏற்ப தங்க ளுக்கு இழப்பீடு வழங்கப்படாத தையும், உயர் மீன் அழுத்த கம்பிகள் தங்கள் நிலத்தின் மேல் ஆபத்தான வகையில் செல்வதையும் காரண மாகக் கூறி, அப்பகுதி விவசாயிகள் மின் பகிர்மான திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எதிர்ப்பு வலுத்ததன் விளைவாக, திட்டத்துக்கான கட்டுமானப் பணி கள் 2 வாரங்களுக்கு முன்பு நிறுத் தப்பட்டது. கடந்த திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர் பிரமுகர் கைது செய்யப்பட்டதை அடுத்து, போராட்டம் தீவிர மடைந்தது.
கைதானவரை போலீஸார் விடுவித்ததோடு, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பிரதிநிதிகள் குழு பன்கார் பகுதிக்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. கட்டுமானப் பணிகளைத் தற்காலிக மாக நிறுத்தி, போராட்டக்காரர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மாநில மின் துறை அமைச்சர் சோவன்தேப் சட்டோபாத்யாய கூறினார்.
எனினும், நேற்று முன்தினம் பன்கார் பகுதியில் ஆங்காங்கே சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டும், கற்களை அடுக்கியும் மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்கள் தாக்கப்பட்டன. பல இடங்களில் வன்முறை வெடித்து கலவரம் மூண்டது.
கலவரத்தின் போது, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த அலம்கீர் ஷேக் (22) மற்றும் மபிசுல் கான் (26) ஆகிய 2 இளைஞர்கள் கொல்லப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால், துப்பாக்கிச் சூடு மற்றும் பலி எண்ணிக்கை குறித்து போலீஸ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.
போலீஸாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். முதல்வர் மம்தா பானர்ஜி சம்பவ இடத்துக்கு வந்துத் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்த உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
பதற்றத்தைத் தணிக்க போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, மேற்குவங்கத்தில் நிலம் கையகப்படுத்தல் எதிர்ப்பு போராட்டம் மூலமாக மம்தா பானர்ஜி தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொண்டார்.
இதே காரணத்தை முன்வைத்து அப்போதைய இடதுசாரி அரசை எதிர்த்து, ஆட்சியையும் கைப் பற்றினார். மம்தா முன்னிறுத்திப் போராடிய அதே விவகாரம் தற்போது அவருக்கு எதிராக பாய்வது குறிப்பிடத்தக்கது.
‘சிங்கூர், நந்திகிராமில் வலுக் கட்டாயமாக நிலம் கையகப்படுத்தக் கூடாது என மம்தா கூறினார். தற் போது அதற்கு மாறாக நடக்கிறார். இடதுசாரிகளின் மறுஉருவம் தான் திரிணமூல் காங்கிரஸ்’ என, பாஜக தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங் கூறியுள்ளார். மம்தாவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டதாக மார்க்சிஸ்ட் கட்சியினரும் விமர்சித்துள்ளனர்.