இந்தியா

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கத் தயார்: ராஜ்நாத் சிங்

ஆர்.ஷபிமுன்னா

‘பிரதமர் பதவிக்கு மோடி மிஷன் 272+ - முஸ்லிம்களின் பங்கு’ என்ற தலைப்பில் பாஜக சார்பில் டெல்லியில் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

எப்போதாவது, எங்கேயாவது எங்கள் தரப்பில் தவறுகளோ, குறைபாடுகளோ இருந்தால் அதற்காக நான் தலைவணங்கி மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன்.

பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. எங்களுக்கு எதிரான தவறான பிரச்சாரத்தை நம்பவேண்டாம். நாட்டின் நலன் கருதி இந்த முறை எங்களுக்கு வாக்களியுங்கள். ஒருமுறை வாக்களித்துப் பாருங்கள். ஒரு அரசை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதற்காக நீங்கள் வாக்களிக்க கூடாது. சகோதரத்துவம், மனிதநேயம் மிக்க வலுவான நாட்டை உருவாக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

2002-ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக ராஜ்நாத் பேசுகையில், “எல்லா முஸ்லிம்களையும் கொலை செய்யுங்கள் என்று மோடி உத்தரவிட்டது போல் காங்கிரஸ் விஷமப் பிரச்சாரம் செய்கிறது. நீதிமன்ற தீர்ப்பையும் ஏற்க மறுக்கிறது. 2002 குஜராத் கலவரம் பற்றித்தான் அதிகம் பேசப்படுகிறது. இதற்கு முன் முதல்வராக இருந்த ஹிதேந்தர் தேசாய் ஆட்சியில் கலவரம் வந்ததே? அதுபற்றி ஏன் பேசவில்லை. நாட்டின் பிரிவினையை ஏற்றுக் கொண்டவர்கள்தான் உண்மையில் மதவாதிகள். நாங்கள் அல்ல. ஆட்சியை பிடிப்பதற்காக நாங்கள் அரசியல் செய்வதில்லை. நாட்டின் வளர்ச்சிக்காகவே அரசியல் செய்கிறோம்” என்றார் ராஜ்நாத்.

SCROLL FOR NEXT