இந்தியா

‘தேனிலவு’ பேச்சால் சர்ச்சை: ராம்தேவ் மீது வழக்கு

செய்திப்பிரிவு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தலித் வீடுகளுக்கு தேனிலவுக்காகச் செல்வதாக சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த யோகா குரு ராம்தேவ் மீது உத்தரப் பிரதேச போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாஜகவுக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள யோகா குரு பாபா ராம்தேவ், லக்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை பேசியதாவது:

ராகுல் காந்தி தனது தொகுதியில் உள்ள தலித் வீடுகளுக்கு தேனிலவுக்காகவும், சுற்றுலாவுக்காகவும் செல்கிறார். அவர் ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்திருந்தால், அந்த அதிர்ஷ்டத்தில் பிரதமராகியிருப்பார். ஆனால், அவர் அதிர்ஷ்டமில்லாதவர்.

அவர் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்தால் பிரதமராக முடியாது என்று தாயார் சோனியா காந்தி கூறியிருக்கிறார். ஆனால், ராகுலோ இந்தியப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருக்கிறார். அதனால், முதலில் பிரதமராகும்படியும், அதன் பின்பு வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படியும் இப்போது சோனியா கூறி வருகிறார்.

இவ்வாறு ராம்தேவ் கூறினார்.

ராம்தேவின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக உத்தரப் பிரதேச போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹபிபுல் ஹசன்

கூறுகையில், “ராம்தேவின் பேச்சு பதிவு செய்யப்பட்ட வீடியோவை போலீஸார் ஆய்வு செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்” என்றார்.

காங்கிரஸ் கண்டனம்

ராம்தேவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் ட்விட்டர் இணையதளத்தில், “ராம்தேவின் பேச்சு தலித்களுக்கு எதிரானது. இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். ராம்தேவின் பேச்சு தொடர்பாக பாஜக கட்சித் தலைமையும், நரேந்திர மோடியும் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

தலித் இயக்கத்தினர் போராட்டம்

ராம்தேவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களும், தலித் இயக்கங்களை சேர்ந்தோரும் உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் பல இடங்களில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராம்தேவ் விளக்கம்

பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து, தனது பேச்சு தலித் பிரிவினரை புண்படுத்தியிருந்தால், அதை வாபஸ் பெற்றுக்கொள்வதாக ராம்தேவ் சனிக்கிழமை கூறினார். தவறான நோக்கத்தில் அக்கருத்தைத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT