கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் மீதும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்தது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தபோது சில தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 2ஜி ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடியை சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு தொடுத்திருந்தது. இதுதொடர்பாக 10 தனி நபர்கள் மற்றும் 9 நிறுவனங்கள் மீது அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் 25-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில் கடந்த 20-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப் படும் என்று நீதிமன்றம் அறிவித் திருந்தது. ஆனால் உத்தரவு தயாராகாத காரணத்தால் அக்டோபர் 31-ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஓ.பி.சைனி ஒத்தி வைத்திருந்தார்.
நீதிபதி ஓ.பி.சைனி முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டு சதி, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஆ.ராசா, கனிமொழி, தயாளு உள்ளிட்ட 19 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய் யப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் 11-ம் தேதி தொடங்கும் என நீதிபதி தெரிவித்தார்.
208 பக்கங்களைக் கொண்ட இந்த உத்தரவில், “தயாளு, கனிமொழி, சரத் குமார் ஆகியோர் பங்குதாரர் களாக உள்ள கலைஞர் டிவிக்கு ஷாஹித் உஸ்மான் பல்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகியோர் ரூ.200 கோடி கொடுத்ததை ஆ.ராசா கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். மேலும் குற்றச்சாட்டு எழுந்தவுடன் ரூ.223.55 கோடியை திருப்பித் தந்த விவகாரத்திலும் ராசாவுக்கு தொடர்பு உள்ளது. இது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் ஆகும்” என கூறப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபண மானால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.