கேரளா முழுவதும் ஜிகாதிகளாக உள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதில் சிலர் உயிரிழந்துள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்குவேன் என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சந்திரவாட் தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளம்பியது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று கேரளாவின் நடபுரம் பகுதியிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் குண்டு வீசியதில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் 4 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறும்போது, "கேரளா முழுவதும் ஜிகாதிகளாக உள்ளனர், கேரளா தற்போது வாழ்வதற்கு சாத்தியமற்ற பகுதியாக மாறியுள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயனை எச்சரிக்க சரியான நேரம் இதுதான்.
இதுபோன்ற வன்முறைகள் கேரளாவில் தொடர்ந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சியை கேரளா சந்திக்க நேரிடும். கேரள முதல்வரால் இந்திய அரசியலமைப்பின்படி ஆட்சி நடத்த முடியவில்லை என்றால் அவருக்கு ஆட்சி செய்ய அதிகாரம் கிடையாது.
கம்யூனிஸ்டுகள் எப்போதும் ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சியை கண்டு வருத்தத்துக்கு உள்ளாகிறார்கள். இந்து மத ஒருங்கிணைப்பு அவர்களைத் தோற்கடிக்கும் என்று நினைக்கிறார்கள்" என்று கூறினார்.