ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபரான இந்திராணி முகர்ஜியின் ஓட்டுநர் ஷ்யாம் வர் ராய் அப்ரூவராக மாறினார். அதனை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
மும்பை அருகே ராய்கட் வனப்பகுதியில் 2012 ஏப்ரலில் பாதி எரிந்த நிலையில் இளம் பெண் ஷீனா போராவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலை வழக்கில் ஷீனா போராவின் தாய் இந்திராணி முகர்ஜி குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபராக கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா, ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கொலையை மறைத்து குற்றவாளியை காப்பாற்ற முயன்றதாக இந்திராணியின் தற்போதைய கணவரும், ஸ்டார் இந்தியா டிவியின் முன்னாள் சிஇஒவுமான பீட்டர் முகர்ஜியும் கடந்த ஆண்டு கைதானார்.
இந்தச் சூழலில் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் கொலை தொடர்பான அனைத்து உண்மைகளையும் தெரிவித்து அப்ரூவராக மாற விரும்புவதாக நீதிமன்றத்தில் மனு அளித்தார். மேலும் தனக்கு மன்னிப்பு வழங்கக் கோரியும் நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு சிபிஐ தரப்பிலும் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து, இவ்வழக்கை இன்று விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹெச்.எஸ்.மகாஜன், ஷ்யாம்வர் ராயை அப்ரூவராக ஏற்பதாக அறிவித்து, அவருக்கு மன்னிப்பு வழங்கினார்.
அப்போது, "கொலை தொடர்பான அனைத்து உண்மைகளையும் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும். என்ன நடந்தது? கொலையாளி யார்? அதில் உனது பங்கு என்ன? என அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். இதற்கு சம்மதமா?" என நீதிபதி கேள்வி எழுப்பினர். இதற்கு ஷ்யாம்வர் ராயும் ஒப்புதல் தெரிவித்தார்.
இதையடுத்து, இவ்வழக்கில் ஷ்யாம்வர் ராய் சாட்சியாக சேர்க்கப்பட்டு, குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.