ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவிக்கு பாட்னாவில் பினாமி பெயரில் ரூ.30.90 லட்சம் மதிப்பில் வீட்டுடன் கூடிய 1,088 சதுர அடி மனை உள்ளது என பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று கூறும்போது, “வீட்டுடன் கூடிய இந்த மனையை லலன் சவுத்ரி என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு ரூ.3.97 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். 2014 ஜனவரியில் இதன் மதிப்பு ரூ.30.90 லட்சமாக இருக்கும்போது இதை ராப்ரி தேவிக்கு பரிசாக அளித்துள்ளார்.
சிவான் மாவட்டம், சியாதி கிராமத்தை சேர்ந்த லலன் சவுத்ரி, அங்கு லாலுவின் கால்நடை கொட்டகையில் வேலை பார்க்கிறார். லாலு தனது பணியாளர் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றியுள்ளார்” என்றார். இது தொடர்பான ஆவணங்களையும் அவர் வெளியிட்டார்.