இந்தியா

ஜாகிர் நாயக், உதவியாளர்களின் 78 வங்கிக் கணக்குகளில் குவிந்த நிதி: என்ஐஏ விசாரணை

செய்திப்பிரிவு

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக், அவரின் என்ஜிஓக்கள் மற்றும் உதவியாளர்களின் 78 வங்கிக் கணக்குகளில் குவிந்த வெளிநாட்டு நிதி குறித்து என்ஐஏ தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

ஜாகிர் நாயக் மற்றும் அவருக்கு சொந்தமான இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவனத்தை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்தது.

முஸ்லிம் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுவதாகவும், மதம் மற்றும் இன அடிப்படையில் சமூகத்தில் மக்களிடையே பகைமையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் நாயக்குக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்தது.

தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும் நாயக் மற்றும் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேனுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது. இதைத்தொடர்ந்து நாயக்குக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனைகள் நடத்தினர்.

ஜாகிர் நாயக்குக்கு சொந்தமாக குறைந்தது 37 இடங்கள் இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் பெரும்பாலும் மகாராஷ்டிரா மாநில நகரங்களில் உள்ளன. மும்பையில் மட்டுமே 25 ஃபிளாட்டுகள் உள்ளன.

புனே, சோலாப்பூர் பகுதிகளிலும் சொத்துக்கள் உள்ளன. இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் மற்றும் நாயக்குக்கு சொந்தமான சொத்துக்களின் சந்தை மதிப்பு ரூ.100 கோடியைத் தாண்டும் என என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக மும்பை போலீஸ் உதவியுடன் மும்பையில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் நாயக்கின் பிரச்சார ஆவணங்கள் மற்றும் அதுதொடர்புடைய 14 ஆயிரம் பதிவுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஏராளமான முக்கிய ஆவணங்களும் சோதனையில் சிக்கின.

என்ஐஏ தலைவர் ஷரத் குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மும்பை விரைந்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் இதர பொருட்களை ஆய்வு செய்து, மும்பை போலீஸாருடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.

இஸ்லாமிக் ரிசர்வ் பவுண்டேஷன் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு ஏராளமான வங்கிக் கணக்குகள் இருப்பதையும் அதிகாரிகள் ஏற்கெனவே கண்டுபிடித்தனர். இந்த வங்கிக் கணக்குகளின் மூலம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பணமும் நாயக்குக்கு கிடைத்து வந்துள்ளது.

வங்கிக் கணக்குகளை உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, நன்கொடை என்ற பேரில் எங்கிருந்தெல்லாம் பணம் வந்தது என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, நாயக், அவரின் நிறுவனங்கள் மற்றும் உதவியாளர்களின் பெயரில் மொத்தம் 78 வங்கிக் கணக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கணக்குகளில் குவிந்த வெளிநாட்டு நன்கொடைகளின் மூலங்களையும் என்ஐஏ ஆராய்ந்து வருகிறது.

SCROLL FOR NEXT