தீவிராவதத்துக்கு ஆதரவான நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
மேலும், தீவிரவாதிகளை போற்றிப் புகழ்வது ஏன், அவர்களை தியாகிகளாக அறிவித்தது ஏன் என்று பாகிஸ்தானிடம் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார்.
சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாடு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் அடிப்படைவாத அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.
இந்தப் பின்னணியில் சார்க் மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
அவர் தனது உரையில், "தீவிரவாதிகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பாகுபாடு கிடையாது. அவர்கள் அனைவருமே தீயவர்கள்தான். தீவிரவாதிகளைப் போற்றிப் புகழ்வதோ, அவர்களை தியாகிகளாக சித்தரிப்பதோ கூடாது. அவ்வாறு செய்வதன் பின்னணி என்ன? தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாட்டை (பாகிஸ்தான்) தனிமைப்படுத்த வேண்டும்.
தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்கு மட்டுமின்றி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நாடுகளுக்கு எதிராகவும் 'கடுமையான நடவடிக்கை' எடுக்கப்பட வேண்டும்" என்றார் ராத்நாத்.
முன்னதாக, சார்க் மாநாடு நடைபெற்ற இஸ்லாமாபாதின் செரீனா ஓட்டலில் மாநாட்டுக்கு வந்தவர்களை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் வாயிலில் நின்று வரவேற்றார்.
ராஜ்நாத் சிங் வந்தபோது இருவரும் ஆரத் தழுவவோ, நட்புடன் கைகுலுக்கவோ இல்லை. சில சம்பிரதாய வார்த்தைகளுக்குப் பிறகு இருவரும் விலகிச் சென்றனர்.
ராஜ்நாத் சிங்கும் நிசாரும் விலகி நின்றிருந்ததை இந்திய பத்திரிகை புகைப்பட கலைஞர்கள், வீடியோகிராபர்கள் படம் எடுக்க முயன்றனர். ஆனால் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவர்களை தடுத்துவிட்டனர்.
பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து இஸ்லாமாபாதில் இருந்து ராஜ்நாத் சிங் இன்று டெல்லி திரும்பினார்.
முன்னதாக, காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக காஷ்மீரில் கலவரம் வெடித்தது. புர்ஹான் வானியை மிகப்பெரிய தியாகி என்று அறிவித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவருக்காக கருப்பு தினத்தையும் அனுசரித்தது குறிப்பிடத்தக்கது.