இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவில்லை என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை பணயம் வைக்கக் கூடாது என்றும் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
இது தொடர்பாக டெல்லியின் புறநகர் பகுதியான குர்கானில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அந்த மாநில சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதவிர நவம்பர், டிசம்பரில் 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதுபோல் மேலும் பல்வேறு காரணங்கள் உள்ளன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் காமன்வெல்த் மாநாடு தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவில்லை. இந்தியாவின் சார்பில் மாநாட்டில் நான் பங்கேற்கிறேன். பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்காததை காரணம் காட்டி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான உறவைப் பணயம் வைக்கக்கூடாது. இருநாட்டு உறவை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இப்போது அவசியமாகிறது.
இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. காமன்வெல்த் மாநாட்டில் அந்த மாகாணத்தின் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனும் பங்கேற்கிறார். வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள், மறுபுனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா உறுதிப் பூண்டுள்ளது. தமிழர் பகுதியில் இந்தியா சார்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன" என்றார் சல்மான் குர்ஷித்.
நாராயணசாமி கருத்து
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் உணர்வுகளைக் கருத்தில்கொண்டே பிரதமர் இலங்கை பயணம் செய்யவில்லை என்றும், இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நாளை கொழும்பு செல்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.