பசுவதை செய்பவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். அதற்காகவே, பசுவதை செய்பவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம் என உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் அம்மாநில அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்துவருகிறது.
அந்த வரிசையில், பசுவதையில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசு அறிவித்தது.
இந்நிலையில், 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு உ.பி. துணை முதல்வர் அளித்த பேட்டியில், "இறைச்சிக்காக பசுக்களை கடத்துபவர்கள், கொல்பவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் இது மற்றவர்கள் மனதில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தும். இத்தகைய குற்றங்களில் ஈடுபட முயல்வோர் மனதில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
அதேவேளையில், பசுவதை செய்ததற்கான ஆதாரம் இருப்பவர் மீதே இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் இச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை" எனக் கூறியுள்ளார்.