சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது, குற்றச்சதியில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளில், சாமியார் ஆசாராம் பாபு மீது ஜோத்பூர் போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
16 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 75 வயதான சாமியார் ஆசாராம் பாபு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, மாதங்களுக்குப் பிறகு அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 1000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையில் 121 ஆவணங்களும் 58 சாட்சிகளின் வாக்குமூலங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
சிறுமியை பலாத்காரம் செய்தது, பெண்களுக்கு எதிராக தவறாக நடந்து கொண்டது, குற்றச்சதி, கடத்தல், குற்றத்தை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறார் நிதிச் சட்டத்தின் கீழும் அவர்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் கிடைக்கும்.
முன்னதாக, மாவட்ட செசன்ஸ் நீதிபதி மனோஜ் குமார் முன்னிலையில் ஆசாராம் மற்றும் இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மேலும் 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நவம்பர் 16-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையும் 16-ம் தேதி தொடங்கும் என்றும் அறிவித்தார்.