குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஏற்கெனவே இறந்த பசுமாட்டின் தோலை உரித்த தலித்துகள் மீது கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
மோட்டா சமதியாரா என்ற கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ போலீஸார் தலித்துகளை தாக்கிய 6 பேரில் 3 பேரை கைது செய்தனர். மீதி 3 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தலித்துகள் ஏற்கெனவே இறந்த பசுமாடு என்று கூறுகையில் தாக்கியவர்களோ அது கொல்லப்பட்டது என்று சந்தேகத்தின் பேரில் தாக்குதலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து வைரலான வீடியோவில், காரில் கட்டி வைத்து இரும்பு கம்பியால் தலித்துகளை இரக்கமின்றி தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி கே.எம்.ஜோஷி கூறும்போது, “இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளோம், 3 பேர் தலைமறைவாகியுள்ளனர். மேலும் அந்தப் பசு ஏற்கெனவே இறந்து போனதா அல்லது தோலுக்காக கொல்லப்பட்டதா என்பதை அறிய தடயவியல் நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இந்தச் சம்பவம் திங்கட் கிழமை நடந்தது” என்றார்.
தாக்கப்பட்டதில் இரண்டு பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் ஜுனாகத் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
தாக்கியவர்கள் ரமேஷ் கிரி, பல்வந்த் சிமர், ரமேஷ் பக்வான், ராகேஷ் ஜோஷி, ரசிக்பாய் மற்றும் நாக்ஜி பாய் வானியா ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இவர்கள் காரில் வந்துள்ளனர். வரும்போதே பசுத்தோலை உரித்துக் கொண்டிருந்த தலித்துகள் மீது சாதிவெறி வசைகளைப் பொழிந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து தங்கள் காரில் வைத்திருந்த இரும்பு ராடு மற்றும் தடிகளால் அவர்களை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
புகார் அளித்துள்ள வஸ்ரம்பாய் சர்வையா, 3 செல்போன்களையும் தாக்கியவர்கள் திருடிச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். 6 குற்றவாளிகளில் ரமேஷ், ராகேஷ், நாக்ஜிபாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, எஸ்.சி/எஸ்.டி க்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.