இந்தியா

தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங்கில் 3-வது நாளாக ‘பந்த்’

பிடிஐ

மேற்குவங்க மாநிலத்தில் மலைப் பகுதியான டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் குர்சியாங் ஆகிய நகரங் களை உள்ளடக்கிய பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர்.

இந்தச் சூழலில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வங்கமொழி கட்டாயமாக்கப் பட்டது. இதனால் ஆவேசமடைந்த ஜிஜேஎம் அமைப்பினர் மாநில அரசைக் கண்டித்தும், மீண்டும் தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தியும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இதையடுத்து கடந்த 12-ம் தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஜிஜேஎம் அழைப்பு விடுத்தது.

இதைத் தொடர்ந்து டார்ஜிலிங் பகுதியில் பள்ளி, கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. எனினும் நேற்று முன்தினம் அரசு அலுவலகங்கள் இயங்கின. இதனால் ஜிஜேஎம் ஆதரவாளர்கள் டார்ஜிலிங்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, பணிக்கு செல்லும் ஊழியர்களை தடுக்க முயன்றனர்.

எனினும் முன்னெச்சரிக்கையாக அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார் ஜிஜேஎம் ஆதரவாளர் களை விரட்டியடித்தனர். அப்போது ஆவேசமடைந்த சிலர் போலீஸார் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த கூடுதலாக 600 துணை ராணுவ வீரர்களை நேற்று முன்தினம் மத்திய அரசு அனுப்பி வைத்தது.

இந்நிலையில் 3-வது நாளான நேற்றும் முழு அடைப்பு காரணமாக டார்ஜிலிங்கில் உள்ள சவுக்பஜார் மற்றும் மால் சாலையில் இருந்த பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போலீஸாரும் பதற்றமான பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் வரை எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT