அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்ற பண மோசடித் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்ததையடுத்து, விஜய் மல்லையா அடுத்த 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் உலகில் அவருக்கு இருக்கும் சொத்துகளை அமலாக்கப் பிரிவினர் முடக்கும் நெருக்கடியை மல்லையா சந்திக்க நேரிடும் என்று தெரிகிறது.
அதாவது அவரது பண மோசடிக் குற்றத்துக்கு தொடர்பில்லாத சொத்துக்களைக் கூட அமலாக்கத்துறை முடக்க நேரிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதே மல்லையாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடியாகும்.
மேலும், அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்பதால் அவரை இந்தியாவுக்கு நாடுகடத்தும் நடைமுறையும் துரிதப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
ஆனால் நிபுணர்கள் தெரிவிப்பது என்னவெனில், பிரிட்டனிலிருந்து அவ்வளவு எளிதில் இந்தியாவுக்கு கொண்டு வர முடியாது என்பதே, குல்ஷன் குமார் கொலை வழக்கில் இந்திய இசையமைப்பாளர் நதீம் சைஃபியின் உதாரணத்தையும் பண மோசடி வழக்கில் சிக்கிய லலித் மோடி உதாரணத்தையும் இவர்கள் காட்டுகிறார்கள்.
நாடுகடத்தும் நடைமுறை பற்றி ராஜ்ய சபா எம்.பி.யும், நதீம் சைஃபி வழக்கில் டிஃபன்ஸ் தரப்பு வழக்கறிஞருமான மஜீத் மேமன் கூறும்போது, “இண்டர்போல் ஒருங்கிணைப்புடன் ரெட்கார்னர் நோட்டீஸ் மூலம் நாட்டுக்கு வெளியே ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட்டை பிறப்பித்திருந்தால் அமலாக்கப் பிரிவினருக்கு நாடுகடத்தும் விவகாரம் எளிதாக அமைய வாய்ப்புள்ளது.
இண்டர்போல் ஆதரவு கிடைத்தால், அவர்கள் மூலம் வாரண்ட் பிறப்பிக்க வேண்டும். இந்திய அதிகாரிகள் இதனை செய்து விட முடியாது. வேண்டுமானால் மல்லையாவை கைது செய்யலாம் ஆனால் ஜாமீனில் விடுவிக்கப்படுவார். பவ் ஸ்ட்ரீட் கோர்ட்டில் நாடுகடத்துவதற்கான நடைமுறைகள் நடைபெறும். இதற்காகவே இந்த கோர்ட் செயல்படுகிறது. அதன் பிறகே விசாரணை தொடங்கும், மிகவும் கடினம், அவர் தான் குற்றமிழைக்கவில்லை என்பார், 100 காரணங்களை தற்காத்துக் கொள்ள முன்வைப்பார்.
இசையமைப்பாளர் நதீம் சைஃபி விவகாரத்தில் 5 ஆண்டுகள் போராடினோம் கடைசியில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆதாரங்கள் நம்பகமாக இல்லை திருப்திகரமான காரணங்கள் இல்லை என்ற அடிப்படையில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
குறிப்பாக பிரிட்டனிலிருந்து ஒருவரை நாடுகடத்துவது என்பது மிகமிகக் கடினம், ஏனெனில் அங்கு மனித உரிமைகளுக்கான மதிப்பீடு உயர்வாக மதிக்கப்படுகிறது. நாடுகடத்தும் கோரிக்கை நிராகரிக்கப்படுவதோடு அல்லாமல் நதீமுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டும் வழங்கப்பட்டது” என்றார் தெள்ளத் தெளிவாக.
அமலாக்கத் துறைக்காக அடிக்கடி ஆஜராகும் வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, “உலகெங்கும் அவருக்கு இருக்கும் சொத்துக்கள் முடக்கப்படுவதால் அவர் இங்கு வர கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். சொத்துக்கள் இல்லாமல் அவரால் வாழ முடியாது” என்றார்.
இன்னொரு அமலாக்கப் பிரிவு அதிகாரி தெரிவிக்கும்போது, “இங்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க அவருக்கு ஒரு வாய்ப்பு. பிரிட்டன் மட்டுமல்ல வேறு எந்த நாடுமே நாடுகடத்துவதற்கு அனுமதிக்காது. இது குறித்த இருதரப்பு ஒப்பந்தம் இருந்தாலும் அவரை இந்தியா கொண்டு வர நாம் வற்புறுத்த முடியாது. பிரிட்டனுக்கு கோரிக்கை வேண்டுமானால் அனுப்பலாம்.
லலித் மோடி வழக்கில் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று கூறவில்லை, ஆனாலும் அவரை இந்தியா கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்னவானது?” என்று கேள்வி எழுப்புகிறார்.
எனவே, சொத்துக்கள் முடக்கம் தவிர மல்லையாவை இங்கு வரவழைப்பதற்கான வேறு வழிகள் எதுவும் அமலாக்கப் பிரிவினருக்கு இல்லை என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.