இந்தியா

இப்பவும் நானே ராஜா - சிறையில் இருந்து லாலு கடிதம்

ஆர்.ஷபிமுன்னா

சிறையில் இருந்தபடி லாலுவே கட்சியின் தலைவராக தொடருவார் என ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் உயர் நிலைக் குழு முடிவு செய்துள்ளது. பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை ராப்ரி தேவி தலைமையில் கூடிய உயர்நிலைக் குழு இந்த முடிவினை மேற்கொண்டது.

மாட்டுத்தீவன வழக்கில் 5 வருடம் தண்டனை பெற்ற லாலு, சிறை சென்ற பின் அவரது ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. அதில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், லோக்சபை எம்பியுமான ரகுவன்ஷ் பிரசாத் மற்றும் ராப்ரி தேவிக்கு இடையே போட்டி நிலவியது. பாட்னாவில் முதன் முறையாக லாலு இன்றி கூடிய உயர்நிலைக் குழுக் கூட்டத்தின் முடிவை அறிய ஆயிரக்கணக்கான ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தொண்டர்கள் கூடியிருந்தனர்.

உயர்நிலைக் கூட்டத்தில் லாலு சிறையிலிருந்தபடி எழுதி அனுப்பிய கடிதம் படித்துக் காண்பிக்கப்பட்டது. அதில், லாலு தானே தலைவராக நீடிப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து அந்த பதவியில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதை முன்கூட்டியே அறிந்ததாலோ என்னவோ, முன்னாள் மத்திய அமைச்சரான ரகுவன்ஷ் பிரசாத் கூட்டத்திற்கு வரவில்லை.

இது குறித்து பிகார் மாநில ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் குமார், 'கூட்டத்திற்கு ஒருநாள் முன்பாக அவருக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டு விட்டது. இதனால், நடக்கவும் சிரமமாக இருந்ததால் அவர் கூட்டத்திற்கு வரவில்லை. கூட்டத்திற்கு கட்சியின் மற்ற எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள் அனைவரும் வந்திருந்தனர்." என சர்ச்சைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT