மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானா பாத் மக்களவைத் தொகுதியின் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் அண்மையில் புனே வில் இருந்து டெல்லி செல்லும் சாதாரண ரக விமானத்தில் ஏறினார். அப்போது தனக்கு உயர் வகுப்பு இருக்கை தர வேண்டும் என்று கோரி தகராறில் ஈடுபட்டார்.
டெல்லி வந்திறங்கியதும் அவரை சமாதானப்படுத்த முயன்ற ஏர் இந்தியாவின் 60 வயது மேலாளரை 25 முறை தனது காலணியால் தாக்கினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை யடுத்து ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோஏர் உள்ளிட்ட 6 விமான நிறுவனங்கள், கெய்க்வாட்டை தங்களது விமானங் களில் பயணிக்க அனுமதிக்க மாட்டோம் என அவருக்கு தடை விதித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் நேற்று பேசிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி, ‘‘சட்டம் அனைவருக்கும் சமம். ஒரு எம்.பி. இப்படி மோசமாக நடந்து கொள்வார் என்பதை நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. வன்முறை எந்த வடிவில் எழுந்தாலும் அது விமான நிறுவனங்களுக்கு மிகப் பெரிய அழிவைத் தேடித் தரும். எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த செய்கைக்கு ஆதரவு அளிக்காது’’ என்றார்.