இந்தியா

காங்கிரஸ் கட்சியில் தொடங்குகிறது ராகுல் காந்தி சகாப்தம்

எஸ்.சசிதரன்

காங்கிரஸ் கட்சியில் அதிகார மையமாக ராகுல் காந்தி இலை மறை காயாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆயினும், அக்கட்சி அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நாட்டின் மிகப் பலம் வாய்ந்த பதவியை கடந்த பத்து ஆண்டுகளாக வகித்து வருபவர் பிரதமர் மன்மோகன் சிங். அவரது அரசு கொண்டு வந்த, குற்றப் பின்னணி எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் பதவிகளைப் பாதுகாக்கும் அவசரச் சட்டத்தினை, "முட்டாள்தனமானது" என்று பகிரங்கமாக அறிவித்திருப்பதன் மூலமாகவும், அதைத் தொடர்ந்து அந்த அவசரச் சட்டம் அவசர கதியில் வாபஸ் பெறப்பட்டிருப்பதும், அக்கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு ராகுல் காந்தி தயாராகி விட்டார் என்பதை, ஓங்கி ஒலிக்க செய்கிறது.

குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.எல்.ஏ, எம்.பி, எம்.எல்.சி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவியைப் பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்தை தனது ஒரு சில வார்த்தைகள் மூலம் நிறுத்திக் காட்டியிருப்பதில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி பெற்றிருக்கும் பலம் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்களும், அமைப்புகளும் பல காலமாக கத்தியும் கேட்காத மத்திய அரசு, புதன்கிழமையன்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட அவசரச் சட்டத்தையும், நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ள சட்டத்திருத்த மசோதாவையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பது பெரும்பாலானோரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக்குழு மற்றும் மத்திய கேபினட் அமைச்சர்கள் ஆகிய மூத்த தலைவர்கள் கலந்து பேசி நீண்ட ஆலோசனைக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட அந்த முடிவினை தனது ஒரே பிரம்மாஸ்திரத்தால் ராகுல் காந்தியால் நிறுத்த முடிந்திருக்கிறது என்பது கட்சியில் அவரது பலம் முன்னைக் காட்டிலும் விஸ்வரூபம் எடுத்திருப்பதை தெளிவாகக் காட்டுகிறது.

"சுத்த முட்டாள்தனம். அதை கிழித்து எறிய வேண்டும்," என்று பிரதமர் தலைமையிலான குழுவினர் எடுத்த முடிவினை, அமெரிக்க அதிபர் ஒபாமாவை மன்மோகன் சந்திப்பதற்கு சற்று முன்பாக, பட்டவர்த்தனமாக அறிவித்ததில் இருந்தே, ராகுலின் அத்தியாயம் காங்கிரஸ் கட்சியில் தொடங்கிவிட்டதாகவே கட்சியில் பேச்சு நிலவுகிறது. அதன்பிறகு, தனது நிலைப்பாட்டை விளக்கி மன்மோகன் சிங்குக்கு ராகுல் கடிதம் எழுதியதும், அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிரதமரை நேரடியாக சந்தித்துப் பேசியதும் தனிக்கதை.

ராகுல்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று பலமான எதிர்பார்ப்பு இருந்து வரும் நேரத்தில், மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு, வரும் நாடாளுமன்ற தேர்தல் மோடி-ராகுல் ஆகியோர் பிரதமர் பதவிக்கு நேரடியாக மோதிக் கொள்ளும் களமாக இருக்கப் போவதை உறுதி செய்திருப்பது போலவே தோன்றுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜ.க. தனது பிரதமர் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், புதன்கிழமையன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் அவசரச் சட்ட வாபஸ் முடிவு, ராகுல் காந்தியின் சொல்லை அக்கட்சியினர் வேதவாக்காக கொள்வதையே மறைமுகமாகக் காட்டுவதாக தமிழகத்தை சேர்ந்த அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார். ராகுலின் பேச்சைக் கேட்டு ஒரு முக்கிய முடிவினை இவ்வாறு மேற்கொள்வது, ஒன்றும் புதிதல்ல என்றும் கட்சியினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அரசியல் கட்சிகள் தங்களது சொத்துக்கணக்கைக் காட்டுவதை, தகவல் அறியும் சட்டத்தின் வாயிலாக மற்றவர்கள் அறிவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்டத்திருத்தத்துக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதனை பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தகக்கது.

ராஜீவின் மறைவுக்குப் பிறகு, 1997-ல் அரசியலில் களமிறங்கி, 1998-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வரும் சோனியா, பத்து ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்து வரும் மன்மோகன் சிங் ஆகியோரை விட அக்கட்சியின் மிகப் பெரும் சக்தியாக ராகுல் காந்தி உருவாகி வருவதையே புதன்கிழமை முடிவு காட்டுவதாக அமைந்துள்ளது. ராகுலின் இந்த புதிய அவதாரம், தமிழகம் போன்ற காங்கிரஸ் கட்சியின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டிருக்கும் மாநிலங்களில் உள்ள தொண்டர்களுக்கு ஒரு உற்சாக டானிக் ஆக அமையும் என்பதை நிச்சயம் மறுக்க முடியாது. ராகுலின் சகாப்தம், தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு புது ரத்தம் பாய்ச்சுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

SCROLL FOR NEXT