ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு ஹிராகாண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் உட்பட 9 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 13 பெண்கள் உட்பட 41 பயணிகள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சத்தீஸ்கரின் ஜகதல்பூரில் இருந்து சனிக்கிழமை மாலை 4.25 மணிக்கு ஒடிஷா தலைநகர் புவனேஸ்வருக்கு ஹிராகாண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் இரவு 11.30 மணிய ளவில் ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம், கொமராட மண்டலத்தில் உள்ள கூனேரு ரயில் நிலையத்தின் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலின் இன்ஜின் தடம் புரண்டது. அடுத் தடுத்து ஏசி பெட்டிகள், லக்கேஜ், பொது, 2-ம் வகுப்பு உட்பட ஒன்பது பெட்டிகள் தடம் புரண்டன. இதில் எஸ் 8, 9 பெட்டிகள் மிக மோசமாக உருக்குலைந்தன.
விபத்துக்குள்ளான பெட்டிகளில் பயணம் செய்த 23 பேர் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். ரயில்வே அதிகாரிகள், போலீஸார், தீயணைப்பு படையினர் மற்றும் பொது மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் பார்வதிபுரம், ராயகட், விஜயநகரம், விசாகப்பட்டினம் அரசு மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு மேலும் 18 பேர் உயிரிழந் தனர். இறந்தவர்களில் 13 பேர் பெண்கள் ஆவர்.
படுகாயமடைந்த 50-க்கும் மேற் பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் களில் பலரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விஜயநகரம், ஒடிஷா மாநிலம் ராயகட் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், ஆந்திர அமைச்சர்கள் மிருணாளினி, கண்டா ஸ்ரீநிவாச ராவ், காமிநேனி ஸ்ரீநிவாச ராவ், ரயில்வே டிஆர்எம். சந்திரலேகா முகர்ஜி ஆகியோர் மீட்புப் பணிகளை நேரில் மேற் பார்வையிட்டனர். மருத்துவமனை களில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் ரயில் விபத்தில் இறந்த வர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித் துள்ளனர். விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், படுகாயமடைந்தவருக்கு தலா ரூ. 50 ஆயிரம், லேசான காயமடைந் தவருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித் துள்ளார்.
நாசவேலை காரணமா?
விபத்து நடந்த கூனேரு ரயில் நிலையம் ஆந்திர மாநிலத்தில் இருந்தாலும், இது ஆந்திரா-ஒடிஷா மாநிலங்களிடையே அமைந்துள்ள ஒரு ரயில் நிலையமாகும். இந்த பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட் டம் அதிகம் உள்ளதாகக் கூறப்படு கிறது. விபத்து நடந்த இடத்தின் அருகே இரண்டு இடங்களில் தண்டவாளங்கள் சுமார் 10 அங்கு லம் வரை உடைந்திருந்ததாக கூறப் படுகிறது. எனவே மாவோயிஸ்ட் களின் நாசவேலை காரணமாக ரயில் தடம் புரண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே இந்த விபத்து குறித்து சிஐடி விசாரணை நடத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
இதுகுறித்து ரயில்வே டிஆர்எம் சந்திரலேகா முகர்ஜி நிருபர்களிடம் கூறியபோது, இதே தடத்தில் சிறிது நேரத்துக்கு முன்பு ஒரு சரக்கு ரயில் கடந்து சென்றுள்ளது. எனவே நாச வேலை காரணமாக ரயில் தடம் புரண்டிருக்கலாம் என்ற கோணத்தி லும் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இறுதியில் இந்த ரயில் நிலையத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் ஆந்திரா, ஒடிஷா மாநில போலீஸார் இணைந்து நடத்திய என்கவுன்ட்டரில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டது நினைவுகூரத் தக்கது.