இந்தியா

‘தனித்தன்மை காக்கப் போராடும் நாகாலாந்து!

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ஒரு வார காலமாக, கிளர்ச்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறது - இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து.

பிப்ரவரி 1 அன்று நடைபெறுவதாக இருந்த, தற்போது ரத்து செய்யப்பட்டு விட்ட, நகராட்சி மன்றத் தேர்தல்கள்தாம் கலவரத்துக்குக் காரணம். இவ்வமைப்புகளில் மகளிருக்கு 33% ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை எதிர்த்துத்தான் இத்தனை களேபரமும். மற்ற மாநிலங்களில் உள்ளது போலவே தங்கள் மாநிலத்திலும், மகளிருக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று, நாகாலாந்து அன்னையர் சங்கம், நீதிமன்றம் சென்று வாதிட்டது. 2012இல் இருந்து 2016 வரை நான்கு ஆண்டுகள் போராடியதன் பலன் - இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உச்ச நீதிமன்றம், மகளிருக்கு 33% ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், 16 ஆண்டுகளுக்குப் பின், நாகலாந்து மாநிலத்தில், நகராட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 1 அன்று தேர்தல்கள் நடைபெற இருந்தன.

நாகாலாந்து மாநில பழங்குடியினர் கூட்டு இயக்கம், இந்த ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்து வருகிறது .

மகளிருக்கு அதிகாரம் வழங்குவது, நாகர் இனத்தில் இல்லை என்பது அவர்களின் வாதம்.

நாகர் இனத்தின் தனித்தன்மையைக் குலைக்கிற செயலாக இதனை, கூட்டியக் கம் பார்க்கிறது. இதுதான் கிளர்ச்சி, கல வரம், துப்பாக்கிச் சூடு, இரு இளைஞர்கள் மரணம் என்று நீண்டுகொண்டே போகிறது.

கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையை ஏற்று, தேர்தல்கள் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டு விட்டன; துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், போராட்டத்தை ரத்து செய்கிற மனநிலை யில், கூட்டு இயக்கம் இல்லை. முதல்வர் ஜீலியாங் பதவி விலக வேண்டும்; அதுவரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

நைடோனு அங்காமி. சிறந்த சமூக சேவைக்காக 2000-ம் ஆண்டு, பத்ம விருது பெற்ற பெண்மணி. அதே ஆண்டு, நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நபர்களில் ஒருவர். தனது ஆறாவது வயதில், கிளர்ச்சியாளர்களின் வன்முறையில், அரசுப் பணியில் இருந்த தனது தந்தையைப் பறி கொடுத்தவர்.

தாயாரால் வளர்க்கப்பட்டு, படித்து, காவல்துறை உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்தார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்டு, இப்பதவியை உதறி விட்டு, பள்ளி ஆசிரியர் ஆனார்.

1984-ம் ஆண்டு, ‘நாகாலாந்து அன்னை யர் சங்கம்' தோற்றுவித்த நைடோனு, மது, போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிரமாகப் போராடி, போதையின் கோரப் பிடியில் இருந்து, தம் இன மக்களை விடுவிப்பதில் பெரும் வெற்றி கண்டார்.

இதனைத் தொடர்ந்து, ‘உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு பிரதிநிதித் துவம்' என்கிற கோட்பாட்டில் முனைந்து இறங்கிய அன்னையர் சங்கம், நீதிமன்றக் கதவுகளை நாடியது.

நாகாலாந்து மக்களின் பாரம்பரிய மரபுசார் வழிமுறைகளுக்கு மதிப்பு அளிக்கிற வகையில், சாசனத்தின் பிரிவு 371ஏ, இம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. இதன்படி, நாகாலாந்து மக்களின் பாரம்பரியம் தொடர்புடைய எந்தச் சட்டமும், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டாலும் கூட, மாநில சட்டப் பேரவையும் அங்கீகரிக்க வேண்டும்.

நகராட்சி அமைப்புகளில் மகளிருக் கான ஒதுக்கீடு, தங்களின் பாரம்பரிய மரபுப்படி, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று, பழங்குடியினர் கூட்டு இயக்கம் கூறுகிறது. தங்கள் மாநில ஆரசு தங்களை வஞ்சித்து விட்டதாகவும், பிரிவு 371ஏ வழங்கிய சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு அமைந்து இருப்பதாகவும் இவர்கள் கருதுகிறார்கள்.

கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு, ‘சுமி' சமுதாயத்தின் தலைமை அமைப்பான சுமி ஹோஹோ ஆகியன, மகளிர் ஒதுக்கீட்டுக்கு எதிரான கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. ஜனவரி 10 அன்றே, தேர்தலில் போட்டியிட யாரும் மனு தக்கல் செய்ய வேண்டாம் என்றும், ஏற்கெனவே தாக்கல் செய்தவர்கள், தங்களின் மனுக்களைத் திரும்பப் பெறுமாறும், சுமி ஹோஹோ அறிவுறுத்தியது. மாநிலத்தில் உள்ள பல்வேறு கிராம கவுன்சில்களும் வேண்டுகோள் விடுத்தன. “ஜனநாயகத் தில் மக்களின் விருப்பமே தலையாயது; ஆகவே மகளிருக்கு ஒதுக்கீடு கூடாது” என்று கூட்டு இயக்க அமைப்பாளர் சுபு ஜமீர் கூறுகிறார். இதற்கு மாறாக தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டதால், கலவரம் வெடித்தது.

பிப்ரவரி 2 இரவு நடந்த வன்முறையில் மாநிலத்தின் பழைய தலைமைச் செயலகம், முக்கியமான இயக்ககங்கள் செயல்பட்ட பழமையான கட்டிடங்கள் தீயிடப்பட்டு அடியோடு அழிந்து போனதாகவும், இவ்வகை வன்முறை செயல்கள் நாகர்களின் வழிமுறை அல்ல என்று பிப்ரவரி 4ஆம் தேதி, ‘நாகலாந்து போஸ்ட்', தலையங்கம் தீட்டி, அமைதி வழிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

பரவலாக எல்லோரின் பாராட்டையும் பெற்ற அன்னையர் சங்கத்தின் செயல் பாடுகள் தற்போது, சுமி ஹோஹோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. ஆனாலும், தனிப்பட்ட முறையில் நைடோனி அங்காமிக்கு எதிராக எதுவும் சொல்லப்படவில்லை.

இதற்கு இடையில், நாகாலாந்து மாநில அமைச்சரவை சனிக்கிழமை அன்று கூடியது.

நகராட்சிகளுக்கு அதிகாரம் வழங்குதல் தொடர்பான அரசியல் சாசனப் பிரிவு 9ஏ-வில் இருந்து நாகாலாந்து மாநிலத்துக்கு விலக்கு அளிக்குமாறு, மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, மொத்தம் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் 60 பேரும், டெல்லியில் பிரதமரை சந்தித்து, உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளனர்.

இத்தனை குழப்பங்களுக்கும் காரணமான முதல்வர் ஜீலியாங் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என பழங்குடியினர் கூட்டமைப்பு திட்டவட்டமாக கூறிவிட்டது.

பிப்ரவரி 7 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு, கொஹிமாவில் உள்ள அங்காமி பொது அமைப்பு கருத்தரங்க அரங்கில் நாகாலாந்து பழங்குடியினர் செயல் கமிட்டி கூடவுள்ளது. இதன் பிறகே இப்போராட்டத்தின் அடுத்த கட்டம் பற்றி தெளிவாகத் தெரிய வரும்.

எல்லாம் சரிதான். மகளிருக்கு அதிகாரம் வழங்குவதை ஏன் இத்தனை மூர்க்கமாக எதிர்க்க வேண்டும்? இந்த மாநிலத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கேக்கியே கே சேமா தனது கட்டுரையில், ‘இது ஒன்றும் மகளிருக்கு எதிரானது அல்ல; மாறாக, மத்திய நிதியை சுருட்டுவதையே தொழிலாகக் கொண்டுள்ள சில ஆண் அரசியல்வாதிகளின் குரல்தான் இது. இவர்களின் சூழ்ச்சிக்கு இளைஞர்கள் பலிகடா ஆகின்றனர்” என குறிப்பிட் டுள்ளார். அப்படித்தான் தோன்றுகின்றது.

மாநில உரிமைகள் மற்றும் வளர்ச்சியை ஒருசேர முன் நிறுத்துகிற, கொண்டு செலுத்துகிற மக்களின் நம்பிக்கை பெற்ற வலுவான தலைமை இல்லாததும், நாகாலாந்தில் அவ்வப்போது நடைபெற்று வரும் கிளர்ச்சிகளுக்கு ஒரு காரணம். இந்தியா வில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் நாகாலாந்து விடுக்கிற செய்தி இது.

பழமையைப் போற்றுவது மட்டும் அல்ல; மாற்றத்துக்கு வழி விடுவதும் பண்பாட்டின் அடிப்படைக் கூறுதான். முன்னதன் உதாரணம் - தமிழகத்தின் ஜல்லிக்கட்டுப் போராட்டம்;

பின்னதற்குத் தடை போடுகிறது - நாகாலாந்து கிளர்ச்சி. இதனை நாகாலாந்து இளைஞர்கள் விரைவாக புரிந்துகொள்வதுதான் மாநில வளர்ச்சிக்கு நல்லதாக இருக்கும்.

SCROLL FOR NEXT