மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரு வதைத் தடுப்பதற்காக மதச்சார்பற்ற கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்போவதாக பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலுவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சிறையிலிருந்து விடுதலையான அவர் பாட்னாவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, எனக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், எனக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
எனக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டுள்ளதால்தான் நான் சிறை செல்ல நேர்ந்ததாக இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா கூறியுள்ளார். அரசியல்வாதிகள் இதுபோன்ற கருத்து கூறுவது அரிது. எனக்காக இரக்கப்பட்ட அவருக்கு நன்றி.
புதிய சட்டத்தின் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கு எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் மன்றத்துக்குச் செல்வேன். வரும் மக்களவைத் தேர்தலில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் வகையில் மதச்சார்பற்ற கட்சிகளை உள்ளடக்கிய வலுவான கூட்டணியை உருவாக்க முயற்சி மேற்கொள்ள உள்ளேன் என்றார்.
வரும் தேர்தலில் பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராம் விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
எப்போதும்போல காங்கிரஸ் கட்சியுடனான உறவு வலுவாக உள்ளதாக தெரிவித்த லாலு, வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியையோ, வேறு ஒருவரையோ பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது அக்கட்சியின் உரிமை என்றும் கூறினார். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் குறித்து பேசுகையில், "பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் 17 ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்த நிதீஷ் எப்படி மதச்சார்பற்றவராக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, இரண்டரை மாத சிறைவாசத்துக்குப் பிறகு வீடு திரும்பிய லாலுவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவரது மனைவி ராப்ரி தேவி சிவப்பு ரோஜாக்களை வழங்கியதுடன், அவருக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கினார்.