உ.பி.மாநில முதல்வரான யோகி ஆதித்ய நாத், தனது காவி உடையால் தன்னைப் பற்றிய தவறான கருத்துகளை பரப்புகின்றனர் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் ஆட்சியேற்ற பிறகு வளர்ச்சித்திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, தேவையற்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்று அதிருப்தி எழுப்பப் பட்டுள்ளது.
அதாவது அரசு அலுவலகங்களில் பான் மசாலா எடுத்துக் கொள்ளக் கூடாது, சட்ட விரோத இறைச்சிக் கூடங்கள் மூடல் என்பதில் கோழி, மீன் இறைச்சிக்கடைகள் மீதும் நடவடிக்கைப் பாய்ந்தது உட்பட சர்ச்சைகளில் சிக்கினார்.
இந்நிலையில் அவர் இன்று கூறும்போது, “என்னைப் பற்றி தவறான கருத்துகள் நிறைய உருவாக்கப்பட்டு வருகின்றன. நான் காவி உடையில் இருப்பதால் இத்தகைய தவறான் கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இப்படிப்பார்த்தால் நாட்டில் நிறைய பேர் காவி உடையை வெறுப்பவர்களாக உள்ளனர் என்றே கூற வேண்டும். ஆனால் அப்படியல்ல.
வேலைத்திறத்தினால் அனைத்துப் பிரிவினரின் நல்மதிப்பையும் பெறுவேன். உ.பி. மாநிலத்தை ஊழலற்றதாக மாற்ற வேண்டும் என்பதே என் இலக்கு.
இன்னும் 14 நாட்களில் கரும்பு விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மாநிலம் முழுதும் 5 அல்லது 6 சர்க்கரை ஆலைகள் திறக்கப்படும்” என்று தெரிவித்தார் அவர்.