காங்கிரஸின் அதிகார மைய மாக சோனியா காந்தி இருக்கும்போது, மன்மோகன் சிங்கின் செயல்பாடுகள் எல்லாம் அவரின் கருத்துக்கு மாறாக இருக்க முடியுமா? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, ஆட்சிக்கு வந்த 2004-ம் ஆண்டிலிருந்தே, சோனியா காந்தி இரண்டு விஷயங்களில் உறுதியாக இருக்கிறார்.
ஒன்று, எது நிகழ்ந்தாலும் சரி, மன்மோகன் சிங்தான் பிரதமர். அவரின் பதவியை பறிக்கக் கூடாது (இது ஒன்று போதுமே, மன்மோகன் சிங் தெம்பாக வலம் வருவதற்கு). மற்றொன்று, என்ன விலை கொடுத்தாலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு நன்றிக் கடனாக, சோனியாவின் குடும்பத்துக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறார் மன்மோகன் சிங் என்கின்றனர். இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவுகிறது. இருதரப்பும் ஒருவரை யொருவர் சார்ந்து இருக்கின்றனர்.
மேலும், சில நேரங்களில் சமரசங்களும் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. தனது கண்ணியத்துக்கு பங்கம் வந்தாலும் அதை சகித்துக் கொள்கிறார் பிரதமர். அதே போன்று, ஆட்சி நிர்வாகங்களில் ராகுலுக்கு அதிருப்தி ஏற்பட்டாலும், அதை பெரிதாக எடுத்துக் கொண்டு மன்மோகனை கேள்வி கேட்பதில்லை சோனியா.
எனவே, மன்மோகனை பொறுத்தவரை ஜம்மென்று பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். ஒரே ஒரு குறை என்னவென்றால், தனக்கு கீழ் பணியாற்றும் அமைச்சர்களுக்கு மன்மோகன் சிங் அதிக இடம் கொடுத்துவிட்டார். இந்த விஷயத்தில்தான் அவர் தோல்வியடைந்துவிட்டார் என்கிறார் மூத்த அரசியல் ஆலோசகர் ஒருவர்.