இந்தியா

எதிரி கப்பல்களை அழிக்கும் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவி சோதனை

செய்திப்பிரிவு

ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பலில் இருந்து நேற்று ஏவப்பட்ட ஏவுகணை வெற்றி கரமாக இலக்கைத் தாக்கி அழித்தது.

பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் நிறுவனத்திடம் இருந்து தொழில் நுட்ப உரிமம் பெற்று, மும்பை மத்கானில் உள்ள கப்பல் கட்டு மானத் தளத்தில் 6 ஸ்கார்பினி ரக நீர்மூழ்கி கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

இதில் முதல் நீர்மூழ்கி ஐஎன்எஸ் கல்வாரி. இந்த நீர்மூழ்கி கடந்த 2015 ஏப்ரல் 6-ல் முதல்முறையாக வெள்ளோட்டம் விடப்பட்டது. கடந்த செப்டம்பரில் பல்வேறு சோதனைகளுக்காக கடற்படையிடம் நீர்மூழ்கி ஒப்படைக்கப்பட்டது.

முதல்முறையாக ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கியில் இருந்து நேற்று அதிநவீன ஏவுகணை ஏவப்பட்டது. அரபிக் கடலில் நடந்த இந்த சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கல்வாரி நீர்மூழ்கியில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை. இது ஒரு மைல் கல். கல்வாரி நீர்மூழ்கி மட்டுமல்ல. ஸ்கார்பினி ரக நீர்மூழ்கி அனைத்திலும் இதுபோன்ற ஏவுகணைகள் பொருத்தப்படும். இதன்மூலம் எதிரி கப்பல்கள் தகர்க்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT