பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (United Jihad Council-UJC) பதான்கோட் தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இது குறித்து ஸ்ரீநகரில் உள்ள செய்தி நிறுவனத்துக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சையத் சதாகத் ஹுசைன் தெரிவித்துள்ள தகவல்களின் படி, 'ஹைவே ஸ்குவாட்' என்ற அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீர் தீவிரவாதிகள் பதான்கோட் விமான தளத்தை தாக்கியுள்ளனர்.
“இந்திய அரசும் அதன் ஊடகங்களும் பாகிஸ்தான் வெறுப்பில் உழன்று வருகின்றன. ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானை குற்றம்சாட்டுவதினால் இந்திய ஒரு போதும் காஷ்மீர் சுதந்திர போராட்டத்துக்கு களங்கம் கற்பிக்க முடியவில்லை. எதிர்காலத்திலும் தங்களது தீங்கான பிரச்சாரத்தினால் இந்தியாவுக்கு ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை.
காஷ்மீர் முஜாஹிதினின் இந்த பதான்கோட் தாக்குதல் இந்தியாவுக்கு ஒரு செய்தியை அறிவுறுத்துகிறது. அதாவது எந்த ஒரு பாதுகாப்பு அமைப்பும், ராணுவ தளமும் தீவிரவாதிகள் எட்டி விட முடியாத நிலையில் இல்லை என்பதே அந்தச் செய்தி.
எனவே பாகிஸ்தானைக் குற்றம்சாட்டுவதை நிறுத்தி, இந்திய அரசு காஷ்மீர் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க காலம் தாழ்த்தாது வாய்ப்பு வழங்கியாக வேண்டும்.
கடந்த 27 ஆண்டுகளாக காஷ்மீர் விடுதலை இயக்கத்தை நசுக்க முயன்று வரும் இந்தியப் படையினரை எதிர்த்து தீவிரவாத இயக்கங்கள் போராடி வருகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜிஹத் கவுன்சில் என்பது லஷ்கர் தீவிரவாத அமைப்பு உட்பட 13 அமைப்புகளின் கூட்டமைப்பாகும். பதான்கோடி தாக்குதலில் தொடர்பிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ள ஜஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இந்த ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் அமைப்பிலிருந்து தன்னை தொலைவுபடுத்திக் கொண்டது.
ஆனால் ஜஷ்-இ-முகமது அமைப்பைத்தான் இந்திய உளவுத்துறையினர் கடந்த 2 நாட்களாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் பொறுப்பேற்றுள்ளதையடுத்து இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தீவிரவாதம் குறித்த விவகாரமும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.