இந்தியா

பொது இடத்தில் தேவையற்ற பேச்சு வேண்டாம்: கூட்டணி, கட்சியினருக்கு லாலு பிரசாத் அறிவுரை

ஐஏஎன்எஸ்

பொது இடத்தில் மோதிக் கொள்வது வேண்டாம் என்று தமது ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுக்கும் லாலு பிரசாத் அறிவுரை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாட்னாவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இரு கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் பொது இடங்களில் தேவையில்லாத பேச்சுகளை தவிர்க்க வேண்டும். பிரச்சினைகள் பிடிபடவில்லை என்றால் வீட்டில் அடங்கி வாய் திறக்காமல் இருப்பது நல்லதாகும்.

நான் சொன்ன கருத்துகள் தேவையற்றது என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் உள்ளவர்களும் ஐக்கிய ஜனதா தளத்தில் உள்ளவர்களும் பேசியிருப்பது அதிருப்தி அளிக்கிறது

பிஹாரில் மகா கூட்டணி வலுவாக ஒன்றுபட்டு உள்ளது. எங்களுக்குள் விரிசல் இல்லை. சரியான பாதையில் மாநிலத்தில் ஆட்சி நடக்கிறது.

நிருபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்பினால் அதற்கு முன்னதாக மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிஹாரில் சட்டம் ஒழுங்கு நிலைமையை கையாள்வது குறித்து முதல்வர் நிதிஷ்குமாருக்கு லாலு தெரிவித்த யோசனைகள் குறித்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் ரகுவம்ச பிரசாத் சிங் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிராக கருத்து வெளியிட்டார்.

இந்தச் சம்பவங்களால் லாலு பிரசாத் வருத்தம் அடைந்திருப்பதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டம்

பாட்னாவில் உள்ள லாலு பிரசாத்தின் வீட்டுக்கு நேற்று கட்சித் தலைவர்கள் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால் அவரது வீடு நேற்று களைகட்டியது.

SCROLL FOR NEXT