சாம்ராஜ் நகருக்குள் நுழைந்த ஒரே மாதத்தில் கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர்கள் பலர் தங்கள் பதவியை பறி கொடுத்திருக்கிறார்கள்.
கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ், ''தைரியம் இருந்தால் எங்க ஊர் மண்ணை மிதித்து பாருங்கள். இல்லையென்றால் சாம்ராஜ் நகரை கர்நாடகத்திலிருந்து பிரித்து தனி மாநிலமாக்கித் தாருங்கள்''என முதல்வர்களை சீண்டும் வகையில் சவால் விடுவார்.
கடந்த 1980-ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த தேவராஜ் அர்ஸ் சாம்ராஜ் நகருக்குள் நுழைந்த ஒரே மாதத்தில் ஆட்சியை பறிகொடுத்தார். அவரைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த குண்டு ராவ் 1982-ஆம் ஆண்டு சாம்ராஜ் நகருக்கு வந்தார். அவருடைய முதல்வர் பதவி ஒரே மாதத்தில் பறி போனது. ராமகிருஷ்ண ஹெக்டே, சாம்ராஜ் நகருக்குள் காலடி எடுத்து வைத்த 15 நாள்களில் ஊழல் புகாரில் சிக்கி முதல்வர் பதவியைப் பறிகொடுத்தார்.
இப்படி சாம்ராஜ் நகருக்குள் நுழைந்து ஆட்சியை பறி கொடுத்த முதல்வர்களின் பட்டியல் சதானந்த கௌடா வரை நீள்கிறது.
இதனால், சில முதல்வர்கள் சாம்ராஜ் நகர் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்து விட்டு, நொண்டிச்சாக்குகளை சொல்லி மாதேஸ்வரன் மலை அடிவாரத்திலே நிகழ்ச்சியை முடித்து விட்டு பெங்களூர் திரும்பி விடுவார்கள்.
கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது சாம்ராஜ் நகருக்கு சென்ற சித்தராமையா ''நான் ஆட்சிக்கு வந்தால், தைரியமாக சாம்ராஜ் நகருக்கு வருவேன்'' என அறிவித்தார். பதவியேற்று 5 மாதங்களானாலும் சாம்ராஜ் நகருக்கு செல்லாமல் இருந்தார். இதனால் எதிர்கட்சியினர் 'பதவிக்கு ஆசைப்பட்டே சித்தராமையா சாம்ராஜ் நகருக்கு வருவதை தவிர்த்து வருகிறார் 'எனப் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
சித்தராமையா ஏற்கெனவே தேதி குறித்தபடி கடந்த திங்கள்கிழமை காலை 11.35 மணிக்கு சாம்ராஜ் நகருக்குள் நுழைந்தார். ரூ. 1,700 கோடி செலவில் நலத்திட்டங்களை அறிவித்தார்.
சட்டமேதை அம்பேத்கர் பவன் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி, அம்பேத்கரின் ஆளுயர சிலையைத் திறந்து வைத்து முழங்க ஆரம்பித்தார்.
''கர்நாடக மாநிலத்தின் எல்லைக்குள் இருக்கும் சாம்ராஜ் நகருக்கு நான் வந்ததில் எந்த பெருமையும் இருப்பதாகக் கருதவில்லை.ஏனென்றால் எனக்கு மூடநம்பிக்கை இல்லை.இந்திய மக்களிடம் மண்டி கிடக்கும் மூடநம்பிக்கைகளை ஒழிக்க அறிவே சிறந்த ஆயுதம் என அம்பேத்கர் போராடினார். கர்நாடகத்திலும் சமூக சீர்திருத்தவாதிகளான பசவண்ணரும், மகாகவி குவெம்புவும் தொடர்ந்து போராடினர். இனியும் தொடர்ந்து சாம்ராஜ் நகருக்கு வந்து மூடநம்பிக்கைகளின் கோட்டையை தகர்த்தெறிவேன்''என சூளுரைத்தார்.
முந்தைய முதல்வர்களின் நாற்காலிகளை காவு வாங்கிய சாம்ராஜ் நகர், சித்தராமையாவின் நாற்காலியையும் காவு வாங்குமா என்ற கேள்வி கர்நாடக அரசியல் வட்டாரத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.