இந்தியா

சாரதா சிட்பண்ட் ஊழல் திரிணமூல் எம்.பி. கைது: அரசியல் பழிவாங்கல் என கட்சியினர் குற்றச்சாட்டு

பிடிஐ

சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஸ்ரீரின்ஜாய் போஸ் நேற்று கைது செய்யப்பட்டார்.

மேற்குவங்கம், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக முக்கிய பிரபலங்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வரிசையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஸ்ரீரின்ஜாய் போஸ் நேற்று கைது செய்யப் பட்டார். மேற்குவங்கத்தில் வங்க மொழி நாளிதழை நடத்தி வரும் அவர், சாரதா சிட்பண்ட் அதிபர் சுதிப்தா சென்னுடன் நிதிசார்ந்த பல்வேறு ஒப்பந்தங்களை மேற் கொண்டிருந்ததாகக் கூறப்படு கிறது.

நேற்று காலை 11 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு ஸ்ரீரின்ஜாய் வந்தார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததால் மாலை 4.30 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறியபோது, அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் சிபிஐ ஏவிவிடப்பட்டுள்ளது, அதன்காரணமாகவே ஸ்ரீன்ஜாய் எம்.பி.யை கைது செய்துள்ளனர், எத்தனை சோதனைகள் வந்தாலும் திரிணமூல் காங்கிரஸ் உறுதியாக நிலைத்திருக்கும் என்றனர்.

மருத்துவமனையில் அமைச்சர் அனுமதி

சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக மேற்குவங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியபோது, அமைச்சர் மதன் மித்ராவின் விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தன.

இந்த வழக்கில் முன்னாள் எம்.பி. தேப்ஜானி முகர்ஜி, முன்னாள் டிஜிபி குணால் கோஷ் பிரபல பாடகர் சதானந்த் கோகோய் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT