இந்தியா

இடதுசாரிகளுடன் கைகோக்க முனையும் காங்கிரஸ்

செய்திப்பிரிவு

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்த்லை எதிர்கொள்வதற்கு இடதுசாரிகளுடன் கைகோர்ப்பதற்கான முயற்சிகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.

இதற்காக, 'மதவாதத்துக்கு எதிரான ஒருமித்த கருத்துடையவர்கள்' என்ற பெயரில் அணியைத் திரட்ட வியூகம் வகுக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், “மதவாதம் என்பது இந்திய ஜனநாயகத்து மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது.

மதவாதம் விஷயத்தில் இடதுசாரிகளின் நிலைப்பாடு என்றுமே மாறாதது. எங்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மதவாதத்தை எதிர்ப்பது என்ற புள்ளியில் ஒன்றாகவும் நெருக்கமாகவும் இருக்கிறோம்.

இதேபோல், ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணிவைத்துக்கொள்ள தயக்கம் காட்டாது” என்றார் சாக்கோ.

அதேநேரத்தில், “காங்கிரஸுடன் ஒரு கட்சிக்கு சில விஷயங்களில் ஒருமித்த கருத்துகள் இருக்கிறது என்பதற்காக, அந்தக் கட்சிகளுடன் அரசியல் கூட்டணி வைத்திருப்பதாக அர்த்தமாகாது” என்றார் அவர்.

இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் தேவைப்பட்டால், இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் ஆதரவைப் பெற முயற்சிக்கும் என்றும், அது மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் விஷயமாகவும் இருக்கும் என்றும் பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2008-ல் இந்திய - அமெரிக்க அணுசகதி ஒப்பந்த விவகாரத்தில், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் விலகிச்சென்றது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT