இந்தியா

இடஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை: பாஸ்வான் உறுதி

பிடிஐ

‘தற்போதுள்ள இடஒதுக்கீடு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. தனியார் துறையில் இடஒதுக்கீடு என்பது திட்ட அளவிலேயே உள்ளது’ என, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் இதுகுறித்து கூறியதாவது:

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தற்போதுள்ள கொள்கையில் எந்த மாற்றத்தையும் செய்யும் திட்டம் தேஜ கூட்டணி அரசுக்கு இல்லை. தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கும் யோசனை திட்ட அளவிலேயே உள்ளது.

இவ்வாறு ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.

மத்திய அரசின் இடஒதுக்கீடு கொள்கையை தற்காலத்துக்கு ஏற்றவாறு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சில மாதங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார். அதுகுறித்த கேள்விக்கு அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் இவ்வாறு பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT