உத்தரப் பிரதேசத்தில் மகா யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று அயோத்தி சென்று, அங்குள்ள பிரபல ஹனுமான் கோயிலில் வழிபட்டார்.
அயோத்தியில் 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத் துக்கு பிறகு நேரு குடும்பத்தினர் அங்கு சென்றதில்லை. 24 ஆண்டு களுக்கு பிறகு முதல்முறையாக ராகுல் அயோத்தி சென்றார்.
உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னிறுத்தி ராகுல் காந்தி மகா யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று தனது 4-வது நாள் பயணத்தை தொடங்கும் முன் அவர் அயோத்தி சென்றார். ஆனால் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி பாபர் மசூதி இடத்துக்கு ராகுல் செல்ல வில்லை. அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள பிரபல ஹனுமான் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
இதுபோல் 1989-ல் அயோத்தி யில் ராமர் கோயில் கட்டுவதற் காக அடிக்கல் நாட்டப்பட்ட இடத் துக்கும் ராகுல் செல்லவில்லை.
ஹனுமான் கோயிலில் வழி படுவதற்கு முன், விஷ்வ இந்து பரிஷத் அமைப்புக்கு எதிரான நிலைப்பாடு மகந்த் கியான் தாஸை ராகுல் காந்தி சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் பேசினார்.
ஹனுமான் கோயில் வழிபாட் டுக்கு பிறகு நேராக விருந்தினர் இல்லம் சென்ற ராகுல் பிறகு அங் கிருந்து தனது பயணத்தை தொடர்ந்தார். அம்பேத்கர்நகர் மாவட்டத்தில் தர்காவில் வழிபட்டபின் ராகுல் நேற்றைய பயணத்தை முடித்துக்கொண்டார்.
முன்னாள் பிரதமரும் ராகுலின் தந்தையுமான ராஜீவ் காந்தி 1990-ல் உ.பி.யில் சத்பவன யாத்திரை மேற்கொண்டார். அப் போது அவர் தனது அயோத்தி பயணத்தின்போது ஹனுமான் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் நேரமின்மை காரணமாக அவரால் செல்லமுடியவில்லை.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த மாதம் வாரணாசி வந்தார். அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபட அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீர் உடல்நலக் குறைவால் அவர் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பினார்.
ராகுல் காந்தியின் அயோத்தி பயணம் இந்து வாக்காளர்களை கவரும் முயற்சியாக கருதப்படுகிறது.