பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் பயன்பாட்டை குறைக்கும்படி அனைத்து மத்திய அமைச்சகங் களையும் உமா பாரதி தலைமையிலான மத்திய நீர்வளம் மற்றும் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து நீர்வளத் துறை இணைச் செயலாளர் சாஸ்வதி பிரசாத் அனைத்து அமைச்சகங் களுக்கும் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீங்கு நாம் அனைவரும் அறிந்ததே. இதை தவிர்க்க நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். நல்ல விஷயங்களை நம் வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்று கூறுவது உண்டு. இதற்கு உதாரணமாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் பயன்பாட்டை நீர்வள அமைச்சகம் நிறுத்திவிட்டது. இது போல் நமது மற்ற அமைச்சகங் களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அதிகாரிகள் கூட்டம் மற்றும் பொதுத்துறைகளின் ஆலோசனைக் கூட்டங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் மத்திய அமைச் சகங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் அதிக அளவில் பயன் படுத்தப்படுகிறது. இங்கு தினமும் பார்வையாளர்களுக்கும் சிறிய குடிநீர் பாட்டில்கள் இலவசமாக விநியோகித்து உபசரிக்கப்படு கிறது. இதனால், காலி குடிநீர் பாட்டில்கள் ஆயிரக்கணக்கில் குப் பையில் சேருகின்றன. இவற்றை அழிப்பதும் சிரமமாக இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை வலியுறுத்தும் வகையில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுளளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் நீர்வளத் துறை இணைச் செயலாளர் சாஸ்வதி பிரசாத் கூறும்போது, “சிக்கிம் மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த சிறிய மாநிலத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்படும்போது நாமும் ஏன் அதற்கு முயற்சி செய்யக் கூடாது? எனவே, பசுமை முயற்சியை வலியுறுத்தும் வகையில் அனைத்து அமைச்சகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு, உடனடியாகப் பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது” என்றார்.
சிக்கிம் தலைமைச் செயலாளர் அலோக் கே.வாத்ஸவா, மாநில அரசின் அனைத்து அலுவல கங்களுக்கும் கடந்த மாதம் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். இதன் பிறகு சிக்கிம் அரசு அலுவலகங் களில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் நின்றுவிட்டதாக கூறப் படுகிறது.
இதற்குமுன் பிஹார் தலைமை செயலாளர் அஞ்சனி குமார் சிங் மாநில அரசின் அனைத்து அலுவல கங்களுக்கும் இதேபோன்ற ஓர் உத்தரவை பிறப்பித்தார். இமாச் சலப் பிரதேசத்திலும் இதுபோல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் பல்வேறு மாநிலங்கள் இதுபோல் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.