உ.பி.சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை இன்று சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. இதில், சிவபால்சிங் யாதவ் மற்றும் ஆசம்கான் உட்பட 191 பேர் இடம் பெற்றுள்ளனர்.
உ.பி.யில் வரும் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரையில் என ஏழு கட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதன் இரண்டாவது கட்டத்திற்கும் தேர்தல் அறிவிக்கை இன்று வெளியாகி வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது.
இந்த நிலையில் உ.பி.யின் ஆளும் கட்சியான சமாஜ்வாதி தனது 191 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை இன்று மாலை வெளியிட்டுள்ளது. இவர்கள் முதல் மூன்று கட்ட தேர்தலுக்கான தொகுதிகளின் வேட்பாளர்கள் ஆவர்.
இதில், சமாஜ்வாதி கட்சியில் உருவான உட்கட்சி பூசலுக்கு காரணமாகக் கருதப்படும் சிவபாலுக்கு ஜஸ்வந்த்நகர் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அக்கட்சியின் நிறுவனரான முலாயம்சிங் யாதவ் மற்றும் அவரது மகனான முதல்வர் அகிலேஷ்சிங் யாதவிற்கு இடையே உடன்பாடு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன் சிவபால் சமாஜ்வாதி கட்சியின் முதல் பட்டியல் என வேட்பாளர்களை அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கிளம்பிய மோதலில் மத்திய தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை அகிலேஷுக்கு ஒதுக்கியது. இதன் பிறகு முலாயம் தன் ஆதரவாளர்கள் என 38 வேட்பாளர்கள் பெயரை மகன் அகிலேஷிடம் ஒப்படைத்தார்.
அகிலேஷ் வெளியிட்ட 191 வேட்பாளர்களில் 52 முஸ்லிம் மற்றும் 18 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். சமாஜ்வாதியின் நிறுவனர்களில் ஒருவரான ஆசம்கானின் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது. இவர் தன் வழக்கமான தொகுதியான ராம்பூரில் போட்டியிடுகிறார். இவரது மகனான அப்துல்லாவிற்கு ராம்பூர் மாவட்டத்தின் ஸ்வார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் முதன்முறையாக அரசியலில் குதித்துள்ளார்.
சிவபாலின் பட்டியலில் இடம் பெற்றிருந்த கிரிமினல் அரசியல்வாதியான அதீக் அகமது கான் மற்றும் சமாஜ்வாதியின் மாநிலங்களவை உறுப்பினர் பின்னி பிரசாத் வர்மாவின் மகனான ராகேஷ் வர்மாவின் பெயர்கள் அகிலேஷால் தவிர்க்கப்பட்டுள்ளன.
கூட்டணி பங்கீட்டில் இழுபறி
இதற்கிடையே, சமாஜ்வாதி கட்சிக்கு காங்கிரஸுடன் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை இன்னும் முடிவிற்கு வரவில்லை. இதனால், காலம் தாழ்த்த விரும்பாத சமாஜ்வாதி தன் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. இவர்கள் கூட்டணியில் சேரத் திட்டமிட்டிருந்த அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தளம் வெளியேற முடிவு செய்துள்ளது. இதன் சார்பில் கேட்கப்பட்ட 45 தொகுதிகளுக்கு பதிலாக வெறும் 20 மட்டுமே ஒதுக்கப்பட்டதால் இந்த முடிவு எனக் கருதப்படுகிறது.
அஜீத் சிங் கட்சியின் முக்கிய வாக்காளர்களான ஜாட் சமூகத்தினர், உ.பி.யின் மேற்கு பகுதியில் அதிகமாக உள்ளனர். இதனால், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் 10 சிறிய கட்சிகளுடன் இணைந்து 403 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது.