இந்தியா

மோடி தலைமையிலான ஆட்சியில் இருண்ட காலத்துக்கு ஜனநாயகம் செல்கிறது: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஐஏஎன்எஸ்

மாறுபட்ட கருத்து கொண்டவர் களை மோடி அரசு, அதிகாரத்தின் மூலம் அடக்கி ஒடுக்க நினைப்ப தாகவும், நாட்டில் ஜனநாயகம் இருண்ட காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக வும், காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நேற்று நடை பெற்றது. கூட்டத்துக்கு தலைமை யேற்று கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

மத்திய அரசு ஆட்சி அதி காரத்தைத் தவறாக பயன்படுத்தி, அடிப்படை சுதந்திரத்தை நசுக்கப் பார்க்கிறது. எதிர்கருத்து உள்ள வர்கள் அனைவரையும் அதி காரத்தின் மூலம் அடக்கி வைக்க மத்திய அரசு முயற்சிக் கிறது. ஜனநாயகம் இருண்ட காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டில் தொலைக்காட்சி சேனல்கள் தண்டிக்கப்படுகின்றன. ஒளிபரப்புக்குத் தடை விதித்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் கைது செய்யப் படுகின்றனர். எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் கேள்விகளுக்கு மத்திய அரசிடம் பதில் இல்லை.

அதனால், கேள்வி கேட்பது அரசுக்குப் பிடிக்கவில்லை. தேச நலன் மற்றும் நாட்டின் பாதுகாப்பை கேடயமாக வைத்துக்கொண்டு, அதன் பெயரில் பொதுமக்களும், சமூக அமைப்புகளும் மிரட்டப்படு கின்றனர்.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தவறான தகவல் களைப் பரப்பவும், பிரிவினை அரசியல் பிரச்சாரத்தை மேற் கொள்ளவும் மோடி அரசு திட்டமிட்டுள்ளது. ஜாதி, மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி ஆதாயம் தேட அவர்கள் முயற்சிப்பார்கள்.

அதனை நாம் முறியடிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசின் தோல்விகள் அனைத்தையும் அம்பலப்படுத்த வேண்டும் என்றார்.

சோனியா பங்கேற்கவில்லை

உடல்நலக் குறைவு காரணமாக சோனியா பங்கேற்காததால், முதல்முறையாக ராகுல் காந்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மன்மோகன் சிங், சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஜனார்த்தன் திவிவேதி, அகமது படேல், அம்பிகா சோனி, ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

வரும் 16-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

என்டிடிவி சேனலுக்கு தடை விதித்தது, ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்ட விவகாரம், ராணுவத்தின் துல்லிய தாக்குதல், ‘சிமி’ அமைப்பினர் படுகொலை, முத்தலாக் விவகாரம், பொது சிவில் சட்டம் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இவை குறித்தும், உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தவிர, கட்சியின் அமைப்புத் தேர்தலை டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டியதால் அதுகுறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT