அரசியலுக்காக மாநிலத்தை பிரிக்க கூடாது என்று ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூறினார்.
ஹைதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில், புதிதாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட சட்டமன்றங் களின் ஒப்புதலுக்குப் பிறகே பிரிக்கப்பட்டன. ஆந்திர சட்டமன்றத்தில் தெலங்கானா மசோதா, மெஜாரிட்டி உறுப்பினர் களால் நிராகரிக்கப் பட்டுள்ளது.
பலரின் தியாகங்களால் ஆந்திர மாநிலம் உருவானது. அரசியலுக்காக மாநிலத்தை பிரிக்க கூடாது. அனைத்து பகுதி மக்களின் உழைப்பால் இந்த மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது. மசோதா நிராகரிக்கப்பட்டதால் ஒன்றும் நடந்து விடாது என கூறுபவர்கள், பின்னர் ஏன் பயப்படுகிறார்கள்?
நிராகரிக்கப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவர், சட்டரீதியாக ஆலோசித்து முடிவெடுப்பார் என எண்ணுகிறேன். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை யை அவர் கேட்கலாம்.
தெலங்கானா எதிர்ப்பு தீர்மானத்திற்கு தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சட்டமன்றத்தில் ஆதரவளித்தனர்.
அதே போன்று மாநில பிரிவினையை ஒற்றுமையோடு நாடாளுமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவரிடமும் முறையிட முன்வர வேண்டும்.
அடுத்த மாதம் 4 அல்லது 5ம் தேதி டெல்லியில் நான் குடியரசுத் தலைவரை சந்தித்து நிராகரிக்கப்பட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க கூடாது என வலியுறுத்துவேன் என்றார் கிரண்குமார் ரெட்டி.