மத்திய அரசு துறைகளில் ஒழுங் காக பணியாற்றாத 129 ஊழியர் களுக்கு கடந்த ஆண்டு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 67,000 ஊழியர்களின் செயல்திறனை மத்திய அரசு மதிப்பீடு செய்து வருகிறது. இதனால் பலர் கலக்கமடைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய பணி யாளர் மற்றும் பயிற்சித் துறை யின் மூத்த உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அரசு வகுத்துள்ள பணியாளர் நடத்தை நெறியை பின்பற்றாத ஊழியர்களுக்கு இந்த நடவடிக்கையால் தண்டனை கூட கிடைக்கலாம். சரிவர கடமை ஆற்றாமல் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக சுமார் 67 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களின் பணி செயல் திறனை அரசு மதிப்பீடு செய்து வருகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற 25,000 அதிகாரிகளின் செயல்திறனும் மதிப்பிடப்படுகிறது’’ என்றார்.
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையமைச்சர் ஜிதேந்திரா சிங்கிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘ஊழியர்களின் செயல்திறனை அரசு அவ்வப் போது மதிப்பீடு செய்வதன் மூலம் நேர்மையானவர்களை தட்டிக்கொடுத்து மேலும் ஊக்குவிக்க முடியும்’’ என்றார்.
கடந்த ஓராண்டில் மட்டும் ஒழுங்காக பணியாற்றாத 129 ஊழியர்களுக்கு மத்திய அரசு கட்டாய பணி ஓய்வு வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தது.