இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்புக்கு எதிராக சட்டத்திருத்தத்தை கொண்டு வருவதற்கு முதலில் ஆதரவு தெரிவித்த பாஜக, இப்போது எதிர்ப்பது ஏன்? இது தொடர்பாக அவர்கள்தான் விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
வழக்குகளில் குறைந்தது 2 ஆண்டுகள் வரை தண்டனை பெறும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க வேண்டும். சிறையில் தண்டனை கைதிகளாக இருப்போர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சட்டத்திருத்தத்தை கொண்டு வருவதற்கு பாஜக முதலில் ஆதரவு தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்ற ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தது. பின்னர் ஏன், தங்களின் நிலையிலிருந்து மாறினார்கள் எனத் தெரியவில்லை.
இந்த விவகாரத்தில் தாங்கள் முன்னதாக எடுத்த நிலையை, இப்போது மாற்றிக் கொள்ள பாஜகவினருக்கு உரிமையுள்ளது. அதற்காக மற்றவர்களும் (காங்கிரஸ்) அதே போன்று மாற வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது.
கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 62(5), பிரிவு 8(4) ஆகியவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்துத்தான் சட்டத் திருத்தத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்தோம்.
இப்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் பதவியில் இருக்கக் கூடாது என பாஜக வலியுறுத்துகிறது. அவ்வாறெனில், குஜராத்தில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின்பும் அமைச்சர் பாபுபாய் பொக்கிரியாவை தொடர்ந்து பதவியில் இருக்க அனுமதிப்பது ஏன்? மனசாட்சியின்படி செயல்பட்டு, அவரின் பதவியை பறித்திருக்கலாமே” என்றார் ப.சிதம்பரம்.
பாபுபாய் பொக்கிரியா, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முந்தைய சட்ட ஷரத்துகளின்படி, தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், அவர் பதவியில் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.