இன்று முத்தலாக் எனும் பெயரில் முஸ்லிம்கள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருப்பதை எவரும் மறுக்க முடியாது. இந்தமுறை குர்ஆனில் இல்லை எனும் போது அது உருவானது எப்படி? இதற்கு வட இந்தியாவில் ஒரு வரலாற்று சம்பவம் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
இதன்படி, கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆசியாவின் இரண்டாவது கலிபாவான ஹசரத் உமரின் ஆட்சிக்காலத்தில் எகிப்தில் ஏற்பட்ட ஒரு சமூகப் பிரச்சினையால், அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தம் கணவன்மார்களை விட்டு விலக விரும்பினர். இதற்காக அவர்கள் ஹசரத் உமரிடம் நீதி கேட்டு சென்றனர். அவர் மக்கள் நீதிமன்றம் போல் ஒரு சபை கூட்டி நவீனமுறையில் அவர்கள் கணவன்மார்களால் ஒரே மூச்சில் மூன்று முறை தலாக் கூறச் செய்து உடனடியாக விவாகரத்து பெற்றுத் தந்தார்.
அப்போதைய சூழலில் செய்யப்பட்ட இது முழுக்க, முழுக்க ஒரு தற்காலிக ஏற்பாடு ஆகும். இங்கு கூறப்பட்ட மும்முறை தலாக்கை தவறாகப் புரிந்துகொண்ட சில ஆண்கள் மற்றும் அது தங்களுக்கு சாதகமாக இருப்பதாகக் கருதியவர்களும் அதை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். இதே காரணம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள மனுதாரர்களாலும் கூறப்படுகிறது.
ஒரே சமயத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தவறானது என பெரும்பாலான முஸ்லிம் அறிஞர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இதனை மதரஸா படிப்பாளிகள், மவுலானாக்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சி பிரமுகர்களும் ஏற்காமல் இல்லை. ஆனால், இவர்கள் அனைவருமே முத்தலாக் எனும் பெயரில் தன் கண்முன் நிகழ்ந்த கொடுமைகளை பல ஆண்டுகளாகக் கண்டும் காணாமல் இருந்தார்கள் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. இதன் வரம்பு கடிதம், தந்தி, தொலைபேசி, ஸ்கைப் வழி, மொபைலில் குறுந்தகவல், இமெயில், வாட்ஸ்அப் என உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால், பொறுமை இழந்த முஸ்லிம் பெண்கள் கடந்த ஐந்து வருடங்களாக எதிர்ப்பு குரல் கொடுக்கத் துவங்கினர். கடைநிலை தஞ்சமாக வேறு வழியின்றி அப்பெண்கள் நீதிமன்றப்படி ஏறி விட்டனர்.
இப்போதும் கூட அந்த உண்மையை பொதுமக்கள் முன்வந்து தைரியமாகக் கூற பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை. முஸ்லிம்களின் உயரிய அமைப்பாகக் கருதப்படும் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும் இதில் கூடி ஆலோசனை செய்தனர். பிறகு முத்தலாக் என்பது தவறான முறை எனவும், அதைப் பின்பற்றுபவர்கள் அப்பகுதி சமூகத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்றும் கோரினர். இந்த அமைப்பால் எதையும் கோரத்தான் முடியுமே தவிர, உத்தரவிட அதிகாரமில்லை. அதேசமயம், இந்த அமைப்பு 'முத்தலாக் முறை தவறானது. இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையான முறை குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை முறையாகக் கடைப்பிடித்தால், புதிய முறைகளுக்கான அவசியம் இல்லை' எனக் கூறி விட்டாலும் பிரச்சினை முடிய வாய்ப்புள்ளது.
இந்த சூழலை தனக்கு சாதகமாக பாரதிய ஜனதா அரசு பயன்படுத்தி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு பாஜக சார்பில், முத்தலாக்கிற்கு மாற்று சட்டம் தயார் என நீதிமன்றத்தில் கூறப்பட்டிருப்பது பெரும் உதாரணம். முத்தலாக் என்பதே தவறான வழிமுறை எனும் போது அதற்கு மாற்று சட்டம் கொண்டுவர வேண்டிய தேவை என்ன என்பது முஸ்லிம்களிடையே எழும் கேள்வி. நீதிமன்றத்தில் பெறப்படும் விவாகரத்தை விட சிறப்பாக குர்ஆனில் தலாக் பெறும் முறை வரையறுக்கப்பட்டுள்ளது என்பதும் முஸ்லிம்களின் வாதம்.
முத்தலாக் என்பது குர்ஆனில் இல்லாத முறை எனவும், அது தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவது தான் முக்கியப் புகார். எனவே, ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யலாமா? வேண்டாமா? என்பதை மட்டும் வேண்டுமானால் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்திருக்கலாம். இதன்மூலம், முத்தலாக் என்பது சட்ட விரோதம் என்பது எளிதில் நிரூபிக்கப்பட்டு விடும். பிறகு அதனால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவது நின்று விட வாய்ப்புள்ளது. மாறாக, தலாக் கூறி விவாகரத்து அளிக்க மாற்று உத்தரவு, புதிய சட்டம் என்பது மதம் விஷயங்களில் தலையிடுவதாக தேவையற்ற குழப்பங்களை விளைவிக்கும் என்றே பலரும் கருதுகின்றனர்.