இந்தியா

புதுச்சேரியில் தேர்தல் பணிகளை தொடங்கினார் நாராயணசாமி

கரு.முத்து

புதுச்சேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க ஆயத்தமாகிவிட்ட மத்திய அமைச்சர் நாராயணசாமி, கடந்த சனிக்கிழமை, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளையும் தொடங்கிவிட்டார்.

புதுவை தொகுதியில் வெற்றிக் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் சந்திக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ். இந்நிலையில் புதுவையில் மத்திய அமைச்சர் நாராயணசாமியை மீண்டும் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமைக்கு கடிதம் அனுப்பியதோடு நேரிலும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இதையடுத்து தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டார் நாராயணசாமி. கடந்த சனிக்கிழமை, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காரைக்காலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்கள் சிலவற்றை தொடக்கி வைத்தார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ’நம்பிக்கை 2014’ என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நலத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா என இரவு வரை காரைக்காலை சுற்றிவந்த நாராயணசாமி, இரவு காரைக்கால் பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்கும் மத்திய காங்கிரஸ் அரசு கொண்டுவந்த திட்டங்கள் குறித்து மினி பிரச்சாரம் செய்துவிட்டுப் போனார்.

தனது சுற்றுப்பயணத்தின் நடுவே, சோழிய வெள்ளாளர், ஆரியவைசியர் உள்ளிட்ட ஏழு சமுதாய அமைப்புகளின் தலைவர்களையும் முஸ்லிம் ஜமாத்தார்களையும் சந்தித்துப் பேசினார். அவர்கள் அனைவரிடமும் புதுவை மற்றும் காரைக்காலுக்கு தான் செய்துள்ள சாதனை திட்டங்களை எடுத்துக்கூறிய நாராயணசாமி, ’மீண்டும் நான் உங்களை எல்லாம் நம்பித்தான் தேர்தலில் நிற்கிறேன். எனக்கு ஆதரவு கொடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டதாக சமுதாயத் தலைவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT