இந்தியா

தாமதமாக வந்த அமைச்சர் வி.கே. சிங்: பேசவிடாமல் உட்கார வைத்த ஆர்எஸ்எஸ்

செய்திப்பிரிவு

மத்திய அமைச்சர் வி.கே. சிங், நிகழ்ச்சி ஒன்றுக்கு ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமாக வந்ததால், அவரின் உரையை ரத்து செய்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி கள், அவரை மற்ற விருந்தினர்களுடன் அமர வைத்து விட்டனர்.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) தார்பில், ‘யுவ சங்கல்ப் ஷிவிர்’ மூன்று நாள் முகாம் ஆக்ராவில் நடந்து வருகிறது. இம்முகாமில், நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு, “தேசத்தின் பாதுகாப்பு மற்றும் ராணுவக் கொள்கைகள்” என்ற தலைப்பில் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியும், வட கிழக்கு மாநிலங்கள் மேம்பாட் டுத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சருமான வி.கே. சிங் பேசுவதாக இருந்தது.

ஆனால், நிகழ்ச்சிக்கு தாமத மாக வந்ததால், அவரின் உரையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்து விட்டனர். தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உட்பட மற்ற முக்கிய விருந்தினர்கள் அமர்ந்திருந்த அறையில் வி.கே. சிங் அமர வைக்கப்பட்டார்.

இது தொடர்பாக நிகழ்ச்சியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் வீரேந்திர வர்ஷனேயா கூறிய தாவது:

காலை 11 மணிக்கு உரை யாற்றவிருப்பதால், அதற்கு முன்னதாக வி.கே. சிங் முகாமுக்கு வரவேண்டும் என நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் 12. 40 மணிக்குத் தான் வந்தார். ஆர்எஸ்எஸ் கொள்கைகளின்படி, யாருக்காகவும் எதற்காகவும் நிகழ்ச்சி நிரலை மாற்ற மாட்டோம். அவர் தாமதமாக வந்ததால், இளைஞர்களுக்கு உரையாற்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மற்றவர் களுக்கு ஒழுங்கைப் போதிக்கும் நாமும் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகள் விதிமுறைகள்தான். இதில் யாரும் விதிவிலக்கல்ல.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT