இந்தியா

ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் சமஸ்கிருத மாணவர்களை அனுமதிக்க பரிந்துரை

ஆர்.ஷபிமுன்னா

நாடு முழுவதிலும் குருகுல முறையில் சமஸ்கிருதம் போதிக்கும் பள்ளிகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் நடத்தும் இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சமஸ்கிருதம் பயின்று வருகின்றனர்.

இதில் படித்து பெறப்படும் ‘உத்தர் மாத்யமார் பிரக் சாஸ்திரி’ என்ற பட்டம், பிளஸ் 2 கல்விக்கு இணையானது ஆகும். எனவே, இந்த மாணவர்களை நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆயுர்வேதக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பில் சேர அனுமதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வைத்திய கணிதப் பாடம் இதில் போதிக்கப்பட்டாலும், அறிவியல் போதிக்கப்படுவதில்லை. நான்கரை ஆண்டு ஆயுர்வேத மருத்துவக் கல்வியில் சேர இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்கள் கட்டாயம் படித்திருக்க வேண்டும். இதனால் சமஸ்கிருத மாணவர்களுக்கு இப்பாடங்களை ‘ஆயுர்வேதத்திற்கு முந்தைய கல்வி’ என்ற பெயரில் ஓர் ஆண்டு பயிற்றுவிக்கலாம் என யோசனை அளிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருத்துவத்தின் பெரும்பான்மையான ஓலைச் சுவடிகள் சமஸ்கிருத மொழியில் உள்ளன. இதனால் ஆயுர்வேத மாணவர்களுக்கு சமஸ்கிருதமும் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது.

இந்நிலையில், சமஸ் கிருதம் படித்த மாணவர்களாக இருந்தால் ஆயுர்வேத மருத்துவம் படிப்பது மிகவும் எளிது என்ற அடிப்படையில் இந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இது மத்திய ஆயுஷ் அமைச்சகத் திற்கு கடந்த வாரம் அனுப்பப் பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் சிசிஐஎம் உறுப்பினரும் அதன் முன்னாள் தலைவருமான டாக்டர் ராஷீத்துல்லா கான் கூறும்போது, “அரபி மொழியை அடிப்படையாகக் கொண்டது யுனானி மருத்துவம்.

இதனால் மதரஸாவில் பயின்ற மாணவர்கள் யுனானி மருத்துவப் பட்டப்படிப்பில் சேர அனுமதிக்கப் படுகின்றனர். இதேபோல் சமஸ் கிருத அடிப்படையிலான ஆயுர் வேதம் பயில அம்மொழி மாணவர் களை சேர்ப்பது வரவேற்கத்தக்கது.

இது ஆயுர்வேத மருத்துவம் வளர்க்க உதவியாக இருக்கும். என்றாலும் யுனானியில் அளிக் கப்படுவது போல், ஆயுர்வேத மருத்துவத்தில் சமஸ்கிருத மாண வர்களுக்கு குறிப்பிட்ட அளவு இடங்களை மட்டுமே ஒதுக்க வேண்டும். இல்லையெனில், பொதுக்கல்வி முறையில் பிளஸ் 2 முடித்து வருபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்” என்றார்.

எம்பிபிஎஸ் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவப் பணிகளை கண்காணிக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலை போல, ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவற்றுக்கு சிசிஐஎம் உள்ளது. இது தற்போது அளித்துள்ள பரிந்துரை மீது ஆயுஷ் அமைச்சகம் மத்திய அரசுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி பிரதமராக பதவியேற்றது முதல் ஆயுஷ் மருத்துவத் துறை கள் மற்றும் சமஸ்கிருத மொழியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனவே சிசிஐஎம் அளித்துள்ள பரிந்துரையை அரசு ஏற்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பாலமிடும் கல்வி

மதரஸாவில் படிக்கும் மாணவர் கள் பெறும் ஆல்மியத், வக்தானியா, முன்ஷி, பாஸில், காமில், ஆலீம் ஆகிய பட்டங்களும் பிளஸ் 2-க்கு இணையாகக் கருதப்படுகிறது. இதில் பெரும்பாலானவற்றில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதில்லை. எனவே இவர்கள் பொதுக்கல்வி யில் பட்டப்படிப்பு பயில அரபி, உருது, மறையியல், பாரசீகம் ஆகிய துறைகளில் மட்டுமே சேர்க்கப் பட்டு வந்தனர். மருத்துவக் கல்வி யில் யுனானியில் மட்டும் அனுமதி கிடைத்து வருகிறது. எனினும், மதரஸா மாணவர்கள் ஆங்கிலம், அறிவியல் உட்பட அனைத்து பாடங்களிலும் பட்டப்படிப்பு பயிலும் வகையில் உ.பி.யில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

இதில் மதரஸா மாணவர்களுக் காக ‘பிரிட்ஜ் கோர்ஸ் (பாலமிடும் கல்வி)’ என்ற பெயரில் ஓராண்டு பயிற்சி அளித்து அனைத்து துறைகளிலும் பட்டப்படிப்புக்கான அனுமதி அளிக்கின்றனர்.

SCROLL FOR NEXT