பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் இந்து ஜனஜக்ருதி சமிதி உறுப்பினர் விரேந்திரசிங் தாவ்டே என்பவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல் லப்பட்டார். கடந்த 2013, ஆகஸ்ட், 20-ம் தேதி பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நாட்டில் சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாக கண்டனம் தெரிவித்து எழுத்தாளர்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தனர். இதனால் சகிப்பின்மை விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி களை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறியதை அடுத்து, கடந்த 2014-ல் இவ்வழக்கு விசாரணையை சிபிஐ வசம் மாற்ற மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கொலை நடந்து 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் முதல் கைது நடவடிக் கையை சிபிஐ எடுத்துள்ளது. இந்து ஜனஜக்ருதி சமிதி உறுப்பினரான விரேந்திரசிங் தாவ்டே என்பவர் இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்று கைதாகியுள்ளார்.
2015 பிப்ரவரியில் கோவிந்த் பன்சாரே என்ற பகுத்தறிவாளரும் கொல்லப்பட்டார். இவ்வழக்கிலும் சமிதிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து சிபிஐ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் சமிதியின் உறுப்பினரான தாவ்டே, 2009 கோவா குண்டுவெடிப்பில் தேடப் பட்டு வரும் முக்கிய குற்றவாளி யான சனாதன் சன்ஸ்தா அமைப்பின் சாரங் அகோல்கருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தாவ்டே மற்றும் அகோல்கரின் வீடுகளில் சோதனை நடத்தி பல்வேறு சிம்கார்டுகள், செல்போன்கள் மற்றும் கம்யூட்டர் களை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் தபோல்கர் கொலை வழக்கில் இருவருக்கும் தொடர்பு இருப்பதற்கான சைபர் தடய வியல் ஆதாரங்கள் கிடைத்திருப்ப தாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தபோல்கர் கொலை வழக்கில் அகோல்கர் தான் முக்கிய சதிகாரர் என்றும் தெரிவிக்கின்றனர். கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாகியுள்ள அகோல் கரை கண்டுபிடிக்க தேசிய புலனாய்வு அதிகாரிகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு எதிராக கடந்த 2012-ல் சர்வதேச போலீஸான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதற்கிடையில் இவ்வழக்கில் முதல் முறையாக குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு தபோல்கரின் மகன் ஹமீது வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘‘மிக தாமதமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் சிபிஐ அதிகாரிகளின் இந்நடவடிக்கை மிகப் பெரிய பணியாகும். முன் கூட்டியே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருந்தால் பகுத்தறி வாளர் பன்சாரே, கன்னட எழுத் தாளர் கல்புர்க்கி ஆகியோரின் கொலை நடந்திருக்காது’’ என்றார்.