வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சனிக்கிழமை மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது.
கருணை மனுக்கள் தொடர்பான குடியரசுத் தலைவரின் முடிவு நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரப்பன் கூட்டாளிகள் பிலவேந்திரன், சைமன், ஞானபிரகாசம், மாதையா உள்ளிட்ட 15 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை கடந்த ஜனவரி 21-ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, அவர்களது கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க காலதாமதமானதை சுட்டிக் காட்டி 15 பேரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்தது.
இதே காரணத்தின் அடிப்படையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையையும் ஆயுளாகக் குறைத்து கடந்த பிப்ரவரி 18-ம்தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் ஏற்கெனவே மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இப்போது புதிதாக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கருணை மனு மீது காலம் தாழ்த்தி முடிவு எடுக்கப்பட்டதை காரணம் காட்டி 15 பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது ஏற்புடையது அல்ல. இந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது.
கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க காலதாமதமானதை சுட்டிக் காட்டி பிரிவு 21-ன்படி குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுதான் விசாரித்திருக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி, குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பிறகு அவரது முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. பிரிவு 72-ன்படி கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தபிறகு நீதிமன்றத்தின் அதிகாரம் வரம்புக்கு உள்பட்டதாகி விடுகிறது.
ஒருவேளை உரிய காரணம் இன்றி கருணை மனு நிராகரிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் கருதினால் அந்த கருணை மனு குடியரசுத் தலைவரின் மறுஆய்வுக்கு மீண்டும் அனுப்பப்பட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை காலதாமதத்தை காரணம் காட்டியிருப்பதால் குடியரசுத் தலைவருக்கே மீண்டும் பரிந்துரைத்திருக்கலாம்.
தீவிரவாத செயல்கள் தொடர்பான தடா உள்ளிட்ட சட்டங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்
ளது. அதை நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. எனவே மரண தண்டனையை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
வாய்மொழி விசாரணை கோரும் மத்திய அரசு
வழக்கமாக மறுஆய்வு மனு மீதான விசாரணை மூத்த நீதிபதியின் அறையில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அப்போது வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனுவில் வாய்மொழி விசாரணை கோரப்பட்டுள்ளது. அதாவது முடிவெடுக்கும் போது மத்திய அரசின் வாதத்தையும் கேட்க வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது.