இந்தியா

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் சீரிய முன்னேற்றம்: வெளியுறவு அமைச்சகம் தகவல்

பிடிஐ

வங்கிக்கடன் மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை லண்டனிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரும் கோரிக்கையில் பிரிட்டன் அமைச்சர் கையெழுத்திட்டு சான்றளித்துள்ளார்.

இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பக்லே கூறும்போது, “பிரிட்டன் உள்துறை அமைச்சகம் பிப்ரவரி 21-ம் தேதி அனுப்பிய தகவலின் படி விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்தும் கோரிக்கையில் பிரிட்டன் அமைச்சர் கையெழுத்திட்டு சான்றளித்துள்ளார் மேலும் விஜய் மல்லையாவுக்கு எதிராக வாரண்ட் பிறப்பிப்பது குறித்து பரிசீலிக்க அந்த கடிதத்தை வெஸ்ட்மின்ஸ்டர் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிபதிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்” என்றார்.

ரூ.9,000 கோடி வங்கிக் கடன் மோசடி உட்பட விஜய் மல்லையா மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன, இந்நிலையில் இந்த புதிய தகவல் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திடம் கடந்த மாதம் 8-ந் தேதி இந்தியா முறைப்படி வேண்டுகோள் கடிதம் சமர்ப்பித்தது.

மேலும், இந்த கோரிக்கையை இங்கிலாந்து தூதரகத்திடம் சேர்ப்பிக்கும் போது, இந்த விவகாரத்தில் இந்தியாவின் கோரிக்கையில் உள்ள நியாயப்பாடுகளை விவரித்ததாகவும் எனவே பிரிட்டன் இந்திய அக்கறைகளுக்கு உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கோபால் பக்லே தெரிவித்தார்.

இந்நிலையில் பிரிட்டன் அமைச்சகத்தின் சான்றளிப்பு மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

SCROLL FOR NEXT