இந்தியா

ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்கு பாகுபலி என பெயர் வைத்த ஆந்திர ஊடகங்கள்

ஐஏஎன்எஸ்

திங்கட்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் புதிய, கனமான ராகெட்டை ஆந்திர ஊடகங்கள் பாகுபலி ராக்கெட் என அழைத்துள்ளனர்.

அதிநவீன ஜிசாட்-19 தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்தது.

இஸ்ரோ, 4 டன் வரையிலான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டை ரூ.300 கோடி செலவில் தயாரித்தது.

ராக்கெட்டுகளை அடையாளப்படுத்த விஞ்ஞானிகள் அதற்கு செல்லப்பெயர் வைப்பது புதிதல்ல. அப்படி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டுக்கு அதன் 640 டன் எடை காரணமாக, ஃபேட் பாய் (fat boy) என பெயரிட்டு குறிப்பிட்டு வந்தனர்.

பாகுபலி திரைப்படத்தில் கனமான சிவலிங்கத்தை படத்தின் கதாநாயகன் தூக்கிக் கொண்டு வரும்படி காட்சி இருக்கும். 3000 கிலோவுக்கு மேல் எடையிருக்கும் ஜிசாட் செயற்கைக்கோளை தாங்கிக்கொண்டு பறப்பதால் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை ஆந்திர ஊடகங்கள் செல்லமாக பாகுபலி ராக்கெட் என பெயரிட்டு அழைத்துள்ளது.

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் நாடு முழுவது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் தாக்கம் இஸ்ரோ ராக்கெட்டையும் விட்டுவைக்கவில்லை என்பது ஆந்திர ஊடகங்களின் மூலம் தெரிந்தது.

SCROLL FOR NEXT