நம் ஊரில் நடிகர்களை கொண்டாடுவது போல, எழுத்தாளர்களை விதவிமாய் கொண்டாடும் அதிசயங்கள் எல்லாம் பக்கத்து மாநிலமான கேரளத்தில்தான் நடக்கிறது. கசாக்கின் இதிகாசம் நாவல் புகழ் ஒ.வி. விசயன் என்றழைக்கப்படும், ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயனுக்கு (Ottupulackal Velukkuty Vijayan) அவரின் உருவம் பொறித்த 10 கிராம் வெள்ளி நாணயத்தை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளனர் பாலக்காடு தபால்தலை மற்றும் நாணயங்கள் சேகரிப்பு மன்றத்தினர்.
110 எண்ணிக்கையில் தலா ரூ.700 மதிப்புள்ள இந்நாணயங்களை விலை கொடுத்து வாங்கியவர்கள் ஓ.வி. விஜயனின் நினைவாக போற்றிப் பாதுகாக்க இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதற்கு நாணய சேகரிப்பாளர்கள் மத்தியில் இருந்த வரவேற்பைப் பார்த்து அடுத்த கட்டமாக மலையாள மொழியின் தந்தை எனப்போற்றப்படும் எழுத்தச்சனுக்கு அடுத்த ஆண்டு அவர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட ஆலோசித்து வருகின்றனர் இம்மன்றத்தினர்.
இப்படி எழுத்தாளர்களின் உருவம் பொறித்து கவுரவிக்கும் முறை ஏற்கெனவே இருந்துள்ளதா என்றால் அதுதான் இல்லை. பிறகு எப்படி? அதை இம்மன்றத்தின் தலைவரும், பாலக்காடு விக்டோரியா கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வருமான ஹைட்ரூஸ் பகிர்ந்து கொண்டார்.
''எங்கள் மன்றம் 1993-ம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தபால்தலைகள் மற்றும் அருகி வரும் நாணயங்கள் சேகரிப்பு மட்டுமல்லாது நாங்கள் மெடல்கள் சேகரத்தையும் இதில் ஒரு பாகமாக செய்து வருகிறோம். அப்படி 11.11.11 தினத்தில் எங்கள் மன்றத்தின் சின்னத்தை வைத்து 10 கிராம் எடையுள்ள ஒரு வெள்ளி நாணயம் வெளியிட்டோம்.
அடுத்த ஆண்டு எங்கள் மன்றம் ஆரம்பமான தினமான மார்ச் 27ல் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபபுரம் கோயில் உருவம் பொறித்து 5 கிராம் வெள்ளி நாணயம், 2 கிராம் தங்க நாணயம் வெளியிட்டோம். இதிலிருந்து வித்தியாசமாக, அதே சமயம் சமூகத்தின் வரலாற்றை சொல்லும்படி ஒரு நாணயம் இந்த ஆண்டு வெளியிட உத்தேசித்தோம்.
ரொம்ப காலத்திற்கு முன்பு மலையாள மொழியின் தந்தை எனப் போற்றப்படும் கவிஞர் துஞ்சத்து ராமானுசன் எழுத்தச்சனுக்கு வண்ண சிறப்பு தபால் உறை வெளியிட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரு எழுத்தாளரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முடிவு செய்தோம். அதில் ஓ.வி.விஜயன் பெயர் முடிவு செய்யப்பட்டது.
(பாலக்காடு விக்டோரியா கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஹைட்ரூஸ்)
அவர் கோழிக்கோடு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவர். ஆனாலும் பாலக்காடு கொல்லங் கோட்டில் வசித்தவர். விக்டோரியா கல்லூரியில் பட்டம் பெற்றவர். 6 நாவல்கள், 9 குறுங்கதைகள், மற்றும் 9 கட்டுரைகள் எழுதியுள்ளார். பத்ம பூஷன், கேந்திரா சாகித்திய அகாதமி விருது, கேரள சாகித்திய அகாதமி விருது, வயலார் விருது, முட்டத்து வர்க்கி விருது, எழுத்தச்சன் விருது என பல விருதுகள் பெற்றவர்.
எனவே அவர் உருவம் பொறித்த நாணயங்களை தயாரித்து எங்கள் மன்றத்தின் 24ஆம் ஆண்டு தின விழாவில் (மார்ச் 30ல்) வெளியிட்டோம். அதை பாலக்காடு ஜில்லா பஞ்சாயத்து தலைவி கே.சாந்தகுமாரி வெளியிட, முன்னாள் அமைச்சர் எம்.ஏ.பேபி பெற்றுக் கொண்டார். இதையே திரும்ப 16.04.2017 அன்று நடந்த நாணயவியல் மன்ற கூட்டத்திலும் வெளியிட்டோம்.
ஓ.வி.விஜயனோட படத்துடன் கூடிய பிளேட் சகிதமாகவும், தனியாக நாணயமாகவும் இருவிதமாக இதை வெளியிட்டுள்ளோம். இதுவரை 110 நாணயங்கள் தயாரிக்கப்பட்டதில் பெரும்பாலும் தீர்ந்து விட்டது. மீதி உள்ளவை தீர்ந்தவுடன் கேட்பவர்களை பொறுத்து தயாரித்து கொடுக்க உள்ளோம்.
ஓ.வி. விஜயன் நாணயம் எங்கள் மன்ற வரலாற்றில் ஒரு மைல்கல். இதை விற்பனை நோக்கத்தில் செய்யவில்லை. வரலாறு இந்த எழுத்தாளரைப் பற்றிப் பேச வேண்டும். அதற்கு இந்த நாணயம் காலங்கடந்த அடையாளமாக திகழ வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இதேபோல் அடுத்த ஆண்டு எங்கள் மன்ற உதய வெள்ளி விழா தினமான மார்ச் 27ல் மலையாள எழுத்தின் தந்தை எனப்போற்றப்படும் எழுத்தச்சன் உருவம் பொறித்த நாணயம் வெளியிட ஆலோசித்து வருகிறோம்!'' என்று குறிப்பிட்டார்.
இந்த நாணயங்களில் டோக்கன் என்றே பெயர் பொறித்துள்ளனர் மன்றத்தினர். வங்கி டோக்கன், கலெக்ஷன் டோக்கன், பால் டோக்கன், விளையாட்டு டோக்கன் என்று எதற்கெடுத்தாலும் டோக்கனே போடும் இந்த காலத்தில் இதை நாணயம் என்று சொல்லாமல் டோக்கன் என்றே போடுவோம். அதுவே விவாதப்பொருள் ஆகி பேசப்படட்டும் என்பதுதான் அதற்கான நோக்கமாம்.