காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி, ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல் லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தது. பிரிவினைவாதிகளின் தொடர் போராட்ட அறிவிப்புகளால் அங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில் தெற்கு காஷ்மீர், புல்வாமா நகரில் கடந்த 5-ம் தேதி கண்ணீர் புகைக்குண்டு வீசப் பட்டதில் காயம் அடைந்த பாசித் முக்தார் என்ற இளைஞர், நகர் மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அங்கு தொடர் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தின் பேரில், காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டது.
கோடை தலைநகர் நகர், பாரமுல்லா, பட்டான், அனந்தநாக், ஷோபியான், புல்வாமா ஆகிய நகரங்களில் ஊரடங்கு அமலில் இருந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கான தடை அமலில் இருந்தது.
பிரிவினைவாதிகள் தங்கள் போராட்ட அழைப்பை வரும் 22-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர். மாலை நேரங்களில் கூட போராட்டத்தை அவர்கள் தளர்த்த முன்வரவில்லை.
பிரிவினைவாதிகளின் போராட்ட அறிவிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று 70-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.