பாட்னா தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அய்னுல் என்ற தாரிக் இன்று அதிகாலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததார் .
பாட்னா ரயில் நிலையத்தின் நடைமேடை எண்.10-ல் இருந்த கழிவறை அருகே படுகாயங்குளுடன் இருந்த தாரிக்கை காவல்துறையினர் மீட்டனர். அவரிடம் இருந்து ஒரு டைரி சில தொலைபேசி எண்கள் பறிமுதல் செய்யப்பட்டன். சந்தேகத்தின் பேரில் போலீஸ் தாரிக்கைடம் விசாரித்தனர்.
விசாரணையின் போது, கழிவறையில் வெடிகுண்டை மறைத்து வைக்க முயன்ற போது எதிர்பாராமல் வெடிகுண்டு வெடித்ததாக தாரிக் தெரிவித்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் பலியானதாக இந்திரா காந்தி மருத்துவமனை இயக்குநர் அருண்குமார் சிங் தெரிவித்தார்.
கடந்த 27- ஆம் தேதியன்று பிகார் தலைநகர் பாட்னாவில், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரச்சார கூட்டம் நடைபெறவிருந்த மைதானத்தில், 6 இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. ஒரு குண்டு பாட்னா ரயில் நிலையத்தில் வெடித்தது.
இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகினர் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று, மருத்துவமனையில் தீவிரவாதிதாரிக் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.