இந்தியா

பதான்கோட் மீண்டும் தாக்கப்படலாம்: நாடாளுமன்ற குழு எச்சரிக்கை

பிடிஐ

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படைத் தளம் அருகேயுள்ள கிராமங்களில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர், எனவே விமானப்படைத் தளம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு எச்சரித்துள்ளது.

மத்திய உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக பி. பட்டாச்சார்யா உள்ளார். அவரது தலைமையிலான குழு எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த குழுவினர் சில நாட்களுக்கு முன்பு பதான்கோட் விமானப் படை தளம் மற்றும் அங்குள்ள எல்லையோர கிராமங்களில் ஆய்வு செய்தனர்.

தற்போது ஜம்முவில் நாடாளுமன்ற நிலைக் குழு முகாமிட்டுள்ளது. அங்கு நிருபர்களிடம் பட்டாச்சார்யா கூறியதாவது:

பதான்கோட் பகுதியில் அண்மையில் சுற்றுப்பயணம் செய்தோம். அங்கு வசிக்கும் கிராமவாசிகளை சந்தித்துப் பேசினோம். அப்போது எல்லையோர கிராமங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தீவிரவாதிகள் எங்கோ பதுங்கி இருக்கிறார்கள் என்பது உண்மை. அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இதன்காரணமாகவே பதான்கோட் விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு சிஆர்பிஎப், பி.எஸ்.எப், ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எல்லையில் ஊடுருவலை தடுக்க பிஎஸ்எப் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக அவர்களுக்கு அதிநவீன கருவிகள் வழங்கப்பட வேண்டும்.

இருநாட்டு எல்லையில் பாகிஸ்தான் பதுங்குகுழிகளை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச விதிகளை பாகிஸ்தான் மீறுகிறது. இதை தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எங்களது ஆய்வறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பிப்போம்.

பாகிஸ்தான் விசாரணை குழு பதான்கோட் வந்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனினும் அரசின் வெளியுறவு கொள்கைகளில் தலையிடவோ, கருத்து தெரிவிக்கவோ விரும்பவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 2-ம் தேதி பதான்கோட் விமானப்படைத் தளம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதே பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்திருப்பதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT