இந்தியா

தேர்தல் வெற்றிக்கு நரேந்திர மோடியே காரணம்: வசுந்தரா ராஜே

செய்திப்பிரிவு

ராஜஸ்தானில் பாஜக அமோக வெற்றி பெற கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியே காரணம் என கூறியுள்ளார் மாநில முதல்வராக தேர்வாக உள்ள வசுந்தரா ராஜே(60).

நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: ராஜஸ்தானில் பாஜக அமோக வெற்றி அடைய நரேந்திர மோடியின் செல்வாக்கு பெரிய அளவில் உதவியுள்ளது. ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியே நடத்தவில்லை. அதனால் மனம் தளர்ந்துவிட்டனர் பொதுமக்கள். இதே நிலை டில்லியிலும் உள்ளது.

குஜராத்தில் நரேந்திர மோடி செய்த சாதனைகள் ராஜஸ்தான் மக்களை வெகுவாக கவர்ந்தது.

குஜராத்தில் முன்னேற்றம் காண வழிசெய்த தனது ஆட்சி நிர்வாகமே நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றத்தக்கது என்பதை உணர்த்திவிட்டார் மோடி.

பாஜக ஆளும் மாநிலங்கள் பெரும்பாலானவை மோடி ஆட்சியை பின்பற்றி முன்னேற்றம் கண்டு வருகின்றன. இதையே இந்திய மக்களும் விரும்புகிறார்கள். இந்த தேர்தலில் மோடியின் பங்கு பிரதானமானது. இது அரையிறுதி ஆட்டம்தான். அடுத்து நடக்க உள்ளதற்கு இது முன்னோட்டம்தான். நரேந்திர மோடி தலைமையில் மத்தியிலும் பாஜக ஆட்சியைப்பிடிக்கப்போகும் என்பதை இது உணர்த்துகிறது.

இதற்காக நன்றியை தெரிவிக்கும் வேளையில் இந்த சாதனையையும் அவர்களுக்கே அர்ப்பணிக்கிறேன். பிரசாரத்துக்கு ஒத்துழைத்த கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாநில மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன் என்றார் வசுந்தரா ராஜே.

மீண்டும் ஆட்சியில் பாஜக உள்கட்சி மோதல்களால் 5 ஆண்டுக்கு முன் தேர்தலில் தோல்வியுற்ற வசுந்தரா ராஜே மீண்டும் பதவியில் அமர உள்ளார்.

ஒரு சமயத்தில் கட்சியிலிருந்து வெளியேறுவதாக மிரட்டல் விடுத்தவர். இந்நிலையில் அசோக் கெலோட் தலைமையிலான ஆட்சியை அகற்றிட பாஜக மேலிடத்தின் ஒத்துழைப்பை பெறும் முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைத்தது.

நரேந்திர மோடி, ராஜஸ்தானின் மூலை முடுக்கெல்லாம் சென்று தீவிர பிரசாரம் செய்து ஆதரவு திரட்டியது கட்சியின் வெற்றிக்கு உதவியுள்ளது.

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ராஜஸ்தானின் அதிகாரம் மிக்க தலைவர் நிலைக்கு உயர அவரது வசீகர இயல்பே காரணம் என்று சொல்லலாம். எதையும் வெளிப்படையாக பேசுபவர் என்று அவரது ஆதரவாளர்கள் பாராட்டினாலும் எளிதில் அணுக முடியாதவர் என அவரது எதிர்ப்பாளர்கள் சொல்லும் குணம் 2008 ல் நடந்த பேரவைத் தேர்தலிலும் அதற்கு அடுத்த மக்களவைத் தேர்தலிலும் கட்சி தோற்க காரணமாகும் என்ற கருத்தும் உள்ளது.

மராட்டிய மன்னர் வம்சத்தைச் சேர்ந்தவரான வசுந்தரா ராஜே, ராஜஸ்தானைச் சேர்ந்த ஜாட் சமுதாய இனத்தவருக்கு மணம் முடிக்கப்பட்டார். பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவரான விஜயராஜே சிந்தியாவின் மகளான வசுந்தரா ராஜே, மறைந்த காங்கிரஸ் தலைவர் மாதவ் ராவ் சிந்தியாவின் சகோதரி. 3 முறை பேரவைக்கும் 5 முறை மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக 1984ல் நியமிக்கப்பட்ட பிறகு அடுத்த ஒரு ஆண்டில் ராஜஸ்தான் மாநில இளைஞர் பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானார். 2003ல் ராஜஸ்தானின் முதல் பெண் முதல்வராக பதவியேற்றார்.

2008ல் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பாஜக இழந்ததும், எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்தார் வசுந்தரா ராஜே. அடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 25 தொகுதிகளில் 4 ல் மட்டுமே வெற்றிபெற்றதால் மேலிட உத்தரவுப்படி எதிர்க்கட்சித்தலைவர் பதவியிலிருந்து 2010 பிப்ரவரியில் ராஜிநாமா செய்தார். ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளிலிருந்து எட்டவே நிற்பவர் ராஜே. கட்சியால் ஓரங்கட்டப்படுவதாக கூறி சிறிது காலம் அடங்கிக்கிடந்த வசுந்தரா ராஜே, கடந்த ஆண்டில் தனது ஆதரவாளர்களை தனது கட்டுக்குள் வைத்திருந்தார்.

கடந்த ஏப்ரலில் கட்சியின் மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார். ஏப்ரலில் பேரணி ஒன்றை நடத்தினார். அதன்பின்னர் கட்சி யின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அவருக்கு பேராதரவு அளித்தவர் வசுந்தரா ராஜே. மும்பை பல்கலையில் பொருளாதாரம், அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றவர். தேர்தல் பிரசாரம் என்றால் கடுமையாக உழைப்பவர், அவரது ஆதரவாளர்கள் அவரை அன்பாக அழைப்பது ‘மகாராணி’.

SCROLL FOR NEXT